2வது தளம் முழுதும் கரும்புகை சூழ்ந்ததால் மூச்சுத்திணறல் | Govt hospital fire | Ramanathapuram
அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் பற்றிய தீ அலறிய நோயாளிகள் ராமநாதபுரம் நகரில் செயல்பட்டு வந்த அரசு தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு ஐந்து தளங்களில் பல்நோக்கு சிகிச்சை மையமாக செயல்படுகிறது. இங்கு ராமநாதபுரம் சுற்று வட்டாரங்களில் இருந்து உள் மற்றும் புற நோயாளிகளாக தினமும் 1000க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர். நேற்றிரவு 11.30 மணி அளவில் 2வது மாடியில் உள்ள இன்வெர்டர் அறையில் திடீரென ஏற்பட்ட மின்கசிவால் தீ பற்றியது. மின் வயர்கள் எரிந்து புகை கிளம்பியதால் 2வது தளம் முழுதும் புகை மண்டலமாக மாறியது. அங்குள்ள ஆண்கள், பெண்கள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த அறுவை சிகிச்சை நோயாளிகள் மூச்சு திணறலால் அலறினர். அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக மின்சாரத்தை துண்டித்தனர். அங்கு வந்த போலீசார், மருத்துவமனை ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள் உதவியுடன் டார்ச் லைட் மற்றும் அவசர விளக்குகளை பயன்படுத்தி 2வது, 3வது மற்றும் 4வது தளத்தில் இருந்த 200க்கும் மேற்பட்ட நோயாளிகளை ஸ்ட்ரெச்சர் பயன்படுத்தியும், கையில் தூக்கி கொண்டும் முதல் தளத்துக்கு அழைத்து சென்றனர்.