கிரீன் கார்டு வைத்திருப்பதால்.. துணை அதிபர் வான்ஸ் அதிர்ச்சி தகவல் Green Card Holder no rights US
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்ற பிறகு, பல அறிவிப்புகளை வெளியிட்டார். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அதிரடியாக வெளியேற்றினார். இந்தியா, சீனா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு கடுமையான வரிகளை விதித்தார். அதன் தொடர்ச்சியாக கோல்ட் கார்டு திட்டத்தை டிரம்ப் அறிவித்தார். கோல்ட் கார்டின் விலை 5 மில்லியன் டாலர். அதாவது இந்திய மதிப்பில் 43 கோடி ரூபாய். கோல்ட் கார்டும் கிரீன் கார்டு மாதிரிதான். அதை வாங்குபவர்கள் காலம் முழுக்க அமெரிக்காவில் வாழலாம். அமெரிக்க அரசின் எல்லா சலுகைகளையும் பெறலாம். கடைசியில் அமெரிக்க குடிமகன் அந்தஸ்தும் கிடைக்கும் என டிரம்ப் அறிவித்தார். முதல் கட்டமாக, 10 லட்சம் கோல்டு கார்டுகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் அரசின் நிதி பற்றாக்குறை தீரும் என டிரம்ப் நினைக்கிறார். டிரம்பின் கோல்ட் கார்டு வந்தால், கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு பாதிப்பு வரக்கூடும் என அமெரிக்காவில் வசிக்கும் இந்தியா, சீனா போன்ற நாட்டினர் நினைத்தனர். நினைத்தது போலவே நடந்து விட்டது.