உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஜிஎஸ்டி அதிகாரிகளின் அடாவடி பற்றி பகீர் புகார் | GST mistakes | Huge fines | Officials negotiating |

ஜிஎஸ்டி அதிகாரிகளின் அடாவடி பற்றி பகீர் புகார் | GST mistakes | Huge fines | Officials negotiating |

ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய்க்கு மேல் வணிகம் செய்வோர், ஜிஎஸ்டி பதிவு செய்ய வேண்டும். அதன்படி தமிழகத்தில் 11.50 லட்சம் வணிகர்கள் ஜிஎஸ்டி பதிவு செய்துள்ளனர். சரக்குகளை எடுத்து செல்லும் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்யும் வணிகவரி அதிகாரிகள், ஜிஎஸ்டி ஆவணத்தில் சிறு தவறு இருந்தாலும், வாகனத்தை முடக்கி, பெரும் தொகையை அபராதமாக விதிப்பதாக புகார் எழுந்துள்ளது. சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் செயல்படும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், வாகனங்களின் உதிரிபாகங்கள், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை அதிகம் உற்பத்தி செய்கின்றன. கோவை, திருப்பூர் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் பம்ப் மோட்டார், ஜவுளி, பின்னலாடை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அதிகம் உள்ளன. உற்பத்தியான பொருட்களை, வாடிக்கை நிறுவனங்களுக்கு லாரி உள்ளிட்ட வாகனங்களில் அனுப்புகின்றன. குறிப்பாக, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய துறைமுகம், ஏர்போர்ட்களுக்கு அனுப்பப்படுகின்றன. அப்போது, சரக்கு மற்றும் சேவைகள் வரி கோட்பாட்டின் படி ஜிஎஸ்டி ஆவணங்களும் தயாரித்து அனுப்பப்புகின்றனர். இந்த ஆவணங்களில் வாகன பதிவு எண், டெலிவரி செய்யும் முகவரி போன்றவற்றில் சில மனித தவறுகள் தெரியாமல் நடப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் வணிக வரி அதிகாரிகள் எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது சரக்கு வாகனங்களை மடக்கி சோதனை செய்கின்றனர். சிறு தவறு என்பதை உறுதிசெய்து வாகனங்களை விடுவிக்கும் முடிவை அதிகாரிகள் எடுக்கலாம். அதோடு சிறு தவறுகளுக்கு 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கவே வழிவகை உள்ளது. ஆனால்அதை செய்யாமல், சிறு தவறு இருந்தாலும் வாகனங்களை முடக்குகின்றனர். உடனே 50,000, 1 லட்சம் ரூபாய், ஜிஎஸ்டி மதிப்பில் 3 மடங்கு, 4 மடங்கு என பெரும் தொகையை அபராதமாக விதிக்கின்றனர். பின்னர் தங்களை தொடர்பு கொள்ளுமாறு கூறி செல்லும் அதிகாரிகள், நேரில் செல்லும் போது அலைக்கழிக்கின்றனர். வாகனத்தை விடுவிக்குமாறு கூறினால் பேரம் பேசுகின்றனர். சீக்கிரம் சரக்குகளை அனுப்ப வேண்டும் என்ற வணிகரின் அவசரத்தை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி சாவகசமாக பேசுகின்றனர். பணம் தர சம்மதித்ததும் சிறிய தொகையை அபராதம் விதித்து, வாகனங்களை அனுப்புகின்றனர். துறைமுகத்திற்கு சரியான நேரத்தில் பொருட்களை அனுப்ப முடியாமல், கப்பல் கிளம்பி விடுவதால் அடுத்த கப்பலில் காத்திருந்து அனுப்ப வேண்டிய நிலை ஏற்படுவதாக சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினர் புலம்புகின்றனர். வாகனங்களை முடக்குவதால், மணிக்கணக்கில் தர வேண்டிய வாடகை, தேவையில்லாமல் நாள் கணக்கில் வழங்கப்படுகிறது. அதோடு தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள வாடிக்கையாளருக்கு குறித்த நேரத்தில் சரக்குகளை அனுப்பவில்லை என்றால் அடுத்த ஆர்டர்களும் கிடைப்பதில்லை. ஏற்கனவே மின் கட்டண உயர்வு, கூலி உயர்வால் குறைந்த லாபத்தில் செயல்படும் தொழில் நிறுவனங்களிடம், ஜிஎஸ்டி ஆவணத்தில் சிறிய தவறை காரணம் காட்டி அதிக அபராதம் வசூலிப்பது, தொழில்களை முடக்கும் நிலையை ஏற்படுத்தி விடும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

ஆக 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ