உலகை அதிரவைத்த வீடியோ: எடுத்த சிறுவனிடம் போலீஸ் விசாரணை Gujarat teen|viral video |Air India Plane
கடந்த 12ம் தேதி மதியம் 1.38 மணிக்கு ஆமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் 230 பயணிகள், 10 பணியாளர்கள், 2 பைலட்டுகளுடன் லண்டனுக்கு புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. அருகில் இருந்த பிஜெ மருத்துவக் கல்லூரி மாணவர்கள் விடுதி கட்டடங்களில் மோதியது. இந்த கோர விபத்தில் 241 பயணிகள் கருகி இறந்தனர். விடுதியில் இருந்த மாணவர்கள் உள்பட 33 பேர் மாண்டனர். உலகையே உலுக்கிய இந்த விமான விபத்து குறித்த ஒரே ஒரு வீடியோ உலகம் முழுவதும் பரவியது. அந்த வீடியோவை எடுத்தது 17 வயது சிறுவன் ஆர்யன். ஏர் இந்தியா விபத்துக்கான ஒரே ஒரு ஆதாரம் ஆர்யன் எடுத்த வீடியோதான். விமான நிலையம் அருகில் வசிக்கும் அந்த சிறுவன் விமானங்கள் பறப்பதை வீடியோஎடுப்பதை பொழுதுபோக்காக வைத்திருந்தான். ஏர் இந்தியா விமானம் புறப்படும் போதும் அப்படித்தான் வீடியோ எடுத்தான். அது விபத்தை சந்திக்கும் என அவன் நினைக்கவில்லை. அவன் சற்றே அதிர்ந்து போனாலும்கூட, விமானத்தின் கடைசி தருணங்களை வீடியோவாக படம்பிடித்தான். அது, சமூக வலைதளங்களில் வைரலானதும் ஆமதாபாத் போலீசார் அவனை விசாரணைக்காக அழைத்தனர். ஆர்யன் தனது அப்பாவுடன் போலீஸ் நிலையம் வந்தான். அவன் வாக்குமூலத்தை போலீசார் புதிவு செய்த பிறகு அனுப்பிவைத்தனர். விமானம் விபத்துக்கு உள்ளானதை பார்த்து நான் முதலில் பயந்தேன். என் சகோதரிதான் முதலில் வீடியோவை பார்த்து அப்பாவுக்கு சொன்னாள். விமானம் விபத்துக்கு உள்ளாகும் என எனக்கு தெரியாது என சிறுவன் ஆர்யன் தெரிவித்தான்.