ஊரார் கேலி பேசியதால் மகளை சுட்டு கொல்ல துணிந்த தந்தை! Gurgaon tennis player | killed by father | Ra
49 வயதான தீபக் யாதவ் ஹரியானா மாநிலத்தின் குருகிராமில் செக்டார் 57-ல் வசிக்கிறார். அவருடைய மனைவி மஞ்சு யாதவ். மகள் ராதிகா யாதவ். 25 வயதான ராதிகா சிறந்த டென்னிஸ் வீராங்கனை. தேசிய அளவில் பல்வேறு பதக்கங்கள் பெற்றவர். தோள்பட்டை வலி காரணமாக டென்னிஸ் போட்டிகளுக்கு செல்வதை விட்டுவிட்டு, மாணவர்களுக்கு டென்னிஸ் பயிற்சி அளிக்கும் மையத்தை நடத்தி வருகிறார். ராதிகாவின் தந்தை, கார் உதிரிபாகங்கள் விற்கும் கடை நடத்தி பின்னர் மூடிவிட்டார். மகள் ராதிகாவுக்கு டென்னிஸ் விளையாட்டில் ஆர்வத்தை வளர்த்து, பல ஊர்களுக்கு சென்று போட்டிகளில் பங்கேற்க உதவியவர் அவருடைய தந்தை தீபக் யாதவ்தான். ஆனால் அந்த விளையாட்டே, அவருக்கு கோபத்தை உண்டாக்கி, மகளை கொலை செய்யும் அளவுக்கு கொண்டு போய்விட்டதுதான் சோகம். நேற்று காலை 10.30 மணி அளவில் ராதிகா யாதவ் சமையல் அறையில் இருந்த போது, தீபக் யாதவ் தனது கை துப்பாக்கியுடன் சென்று ராதிகாவை சுட்டுக் கொன்றார். போலீசாருக்கு தகவல் கிடைக்க அவர்கள் தீபக் யாதவை கைது செய்து விசாரணை நடத்தினர். இன்று நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய போலீசார், ஒரு நாள் போலீஸ் காவல் வேண்டும் என்றனர். அதற்கு அனுமதி அளித்து கோர்ட் உத்தரவிட்டது. டென்னிஸ் நட்சத்திரமாக ஜொலித்த மகளை, அவருடைய தந்தையே சுட்டு கொன்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. தீபக் யாதவ் கார் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையை மூடிவிட்டு வேறு வேலை எதுவும் செய்யாமல் இருந்தார். மகள் ராதிகாவுக்கு டென்னிஸ் பயிற்சி மையம் மூலம் நல்ல வருமானம் வந்தது. இதனால் ஊரில் உள்ளவர்கள் மகளின் வருமானத்தில் வாழ்வதாக தீபக் யாதவை கேலி செய்துள்ளனர். இது தீபக் யாதவுக்கு பெரும் அவமானமாக போனது. டென்னிஸ் பயிற்சி மையத்தை மூடிவிடும்படி மகளிடம் தீபக் பல முறை சொல்லி இருக்கிறார். ராதிகா அதை கேட்டதாக தெரியவில்லை. தீபக் யாதவுக்கு வாடகை வருமானங்கள் வந்தன. அதனால் டென்னிஸ் பயிற்சி மையம் தேவையில்லை என வற்புறுத்தி வந்தார். அது குறித்து இருவருக்கும் அடிக்கடி தகராறுகளும் ஏற்பட்டு வந்தன. ஊரார் பேச்சுகள் தீபக் யாதவுக்கு மன உளைச்சலை தந்த நிலையில், நேற்று காலை அது மகளையே சுட்டுக் கொல்லும் அளவுக்குச் சென்றுவிட்டது என போலீசார் தெரிவிக்கின்றனர்.