உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பஹல்காம் அட்டாக்கில் பாக் ராணுவம் பங்கு இதுதான்: இந்தியா Pahalgam terror attack terrorist Adil Ahmed

பஹல்காம் அட்டாக்கில் பாக் ராணுவம் பங்கு இதுதான்: இந்தியா Pahalgam terror attack terrorist Adil Ahmed

மினி சுவிட்சர்லாந்து என அழைக்கப்படும் பஹல்காமின் பைசரைன் Baisaran Valley சுற்றுலா ஸ்தலத்தில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய வெறித்தனமான தாக்குதலுக்கு 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். தாக்குதலில் ஈடுபட்டபயங்கரவாதிகளில் 3 பேர் விவரங்களை காஷ்மீர் போலீஸ் வெளியிட்டது. முதல் நபர் காஷ்மீரிலுள்ள அனந்த்நாக்கை சேர்ந்த பயங்கரவாதி ஆதில் அகமது தோகர் Adil Ahmed Thoker, தாக்குதலின் மூளையாக செயல்பட்டான். அலி பாய், ஹாஷிம் மூசா ஆகியோர் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் என அடையாளம் காணப்பட்டனர். 4வது நபராக புல்வாமாவை சேர்ந்த பயங்கரவாதி ஆசிப் ேஷக் Asif Shaikh தாக்குதலில் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளான் என தெரிய வந்தது. பயங்கரவாதி ஆதில் தோகர் 2018 ல் மாணவர் விசா மூலம் பாகிஸ்தானுக்கு சென்றுள்ளான்; அங்கு லஷ்கர் இ தொய்பா இயக்கத்தில் போர் பயிற்சி பெற்றுள்ளான். 2024ல் 3 அல்லது 4 பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் காஷ்மீரில் ஊடுருவினான்; அவர்களில் ஒரு பயங்கரவாதி ஹாஷிம் மூசா என உளவுத்துறை விசாரணையில் தெரியவந்தது. இப்போது அதையும் விஞ்சும் வண்ணம் இன்னொரு திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்பு படை பிரிவில் கமாண்டோவாக பயங்கரவாதி ஹாஷிம் மூசா பணியாற்றியுள்ளான் என்பது தான் அது. திறமைமிக்க கமாண்டோ வீரனான ஹாஷிம் மூசா திடீரென லஷ்கர் இ தொய்பா இயக்கத்தில் சேர்ந்தான். இதனால் ராணுவத்தில் இருந்து ஹாசிம் மூசா நீக்கப்பட்டான். ஆனால், அவனை லஷ்கர் அமைப்பில் சேரச் சொன்னதே பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்புப்பிரிவு ப டை அதிகாரிகள்தான் என்பது அதிர்ச்சியிலும் அதிர்ச்சி. லஷ்கர் இ தொய்பாவை வலுப்படுத்தவும், காஷ்மீரில் அதன் செயல்பாட்டை இன்னும் வேகப்படுத்தவும்தான் ஹாஷிம் மூசாவை பாகிஸ்தான் சிறப்புப்படை அதிகாரிகள் அனுப்பியதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் ராணுவத்தின் பல அதிரடி ஆபரேஷன்களில் ஆஷிப் மூசா அங்கம் வகித்துள்ளான். அதிநவீன ஆயுதங்களை கையாள்வதில் கைதேர்ந்தவன்; மற்றவர்களுடன் கூட்டு சேர்ந்து போரில் ஈடுபடும் திறன் படைத்தவன். எந்த சூழலிலும் தன் உயிரை தற்காத்து தாக்குதல் நடத்தும் திறமை கொண்டவன் என தெரிய வந்துள்ளது. ஹாஷிம் மூசா 2023ம் ஆண்டில் ஸ்ரீநகர் அருகே உள்ள பட்கம் மாவட்ட எல்லை வழியாக காஷ்மீருக்குள் ஊருவியுள்ளான் என்பதும் உறுதியாகியுள்ளது. அதன்பிறகு, அன்டர்கிரவுண்டுக்கு சென்ற ஹாஷிம் மூசா காஷ்மீர பயங்கரவாதிகளுடன் இணைந்து தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளான். இந்த தகவல்களை உள்ளூர் பயங்கரவாதிகள்தான் என்ஐஏவிடம் தெரிவித்துள்ளனர். பஹல்காம் தாக்குதல் நடந்ததும் காஷ்மீர் போலீசாரும் ராணுவமும் சேர்ந்து காஷ்மீர் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தங்குமிடம் தந்து உதவி செய்பவர்கள், பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்பில் உள்ளவர்கள் என 2 ஆயிரம் பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, பஹல்காம் தாக்குதலுக்கு உதவி செய்திருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 14 உள்ளூர் பயங்கரவாதிகளை போலீசார் தூக்கினர். அவர்களில் ஒரு பயங்கரவாதிதான் ஹாஷிம் மூசா பற்றிய தகவல்களை கூறியுள்ளான் என என்ஐஏ அதிகாரிகள் கூறினர். இந்த 14 உள்ளூர் பயங்கரவாதிகள்தான் பஹல்காம் சென்று வேவு பார்த்து வந்து, ஆதில் தோகர் உள்ளிட்ட குழுவினரிடம் கூறியுள்ளனர் . பஹல்காம் அட்டாக் பயங்கரவாதிகளுக்கு தங்குமிடம் மற்றும் இன்னபிற வசதிகளை மட்டும் இவர்கள் செய்து தரவில்லை. தாக்குதலுக்கு பயன்பட்ட துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை அவர்களுக்கு கொண்டு சென்று கொடுத்ததும் இந்த உள்ளூர் பயங்கரவாதிகள்தான் என விசாரணையில் உறுதியாகியுள்ளதாக, என்ஐஏ அதிகாரிகள் கூறியுள்ளனர். பஹல்காம் தாக்குதலில் மட்டுமல்ல; 2024ல் காஷ்மீரில் நடந்த 3 பயங்கரவாத தாக்குதல்களிலும் ஹாசிம் மூசா பங்கெடுத்திருப்பதும் எ்னஐஏ விசாரணையில் தெரிய வந்துள்ளது. 2024 அக்டோபர் 20ம்தேதி Ganderbal கந்தர்பாலில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஒரு டாக்டர் உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர். அதற்கடுத்த 4வது நாளில் குல்மார்க்கில் ராணுவ வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல்களிலும் ஹாஷிம் மூசா பங்கேற்றதை என்ஐஏ அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர் ஹாசிம் மூசா பாகிஸ்தான் ராணுவ சிறப்புப்படை கமாண்டோ என தெரியவந்திருப்பதன் மூலம் பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்கும் நேரடி தொடர்பு இருப்பது உறுதியாகியுள்ளது. யாரோ சில பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுக்கும் நடவடிக்கைகள் எந்தவிதத்தில் நியாயமாகும் என கேட்கும் பாகிஸ்தானியர்களுக்கு ஹாஷிம் மூசாவை சுட்டிக் காட்டி இந்திய அதிகாரிகள் பதிலடி கொடுக்கின்றனர்.

ஏப் 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ