டில்லியில் வெளுத்து வாங்கும் கனமழை: ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டதால் மக்கள் பீதி | Delhi Rain
டில்லி மற்றும் என்சிஆர் பகுதியில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. நேற்றிரவு துவங்கிய மழை அவ்வப்போது விட்டு விட்டு கொட்டித் தீர்ப்பதால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பார்லிமென்ட் செல்லும் சாலை, தலைமை செயலகம், விமான நிலையம், ரயில் நிலையம் அமைந்துள்ள பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஏர்போர்ட் மற்றும் அதை சுற்றிய பகுதிகளில் கனமழை தொடர்வதால், விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு உள்நாட்டு விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இண்டிகோ விமானங்களின் புறப்பாடு நேரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டில்லிக்கு ஏற்கனவே மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், தற்போது அது ஆரஞ்ச் அலர்ட்டாக மாற்றப்பட்டுள்ளது. கனமழையின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால், மக்கள் பீதி அடைந்துள்ளனர். உத்தர பிரதேசம் ஹரியானாவிலும் கனமழையின் தாக்கம் அதிகம் காணப்படுகிறது. மதுரா, சண்டிகர், குருகிராம் ஆகிய நகரங்களிலும் கனமழை பெய்வதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் கடந்த வாரம் பெய்த மழையால், மாநகர் முழுதும் வெள்ளம் சூழ்ந்தது. வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்கள் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.