அதீத கனமழையால் நிலச்சரிவு: உருக்குலைந்த ஹிமாச்சலப்பிரதேசம் Himachal Pradesh Flood| Landslide
ஹிமாச்சல பிரதேசத்தில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மாநிலம் முழுதும் கனமழை பெய்கிறது. மலைப்பாங்கான பகுதிகளில், நிலச்சரிவும், நீர்நிலை அமைந்துள்ள பகுதிகளில் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குலு, மணாலி, ஷிம்லா உள்ளிட்ட சுற்றுலா நகரங்களில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மண்டி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவால் பல வீடுகள் இடிந்து விழுந்தன. மாநிலம் முழுதும் தீவிரம் அடைந்துள்ள பருவமழையால் கடந்த 36 மணி நேரத்தில் 10 பேர் பலியாகினர், காணாமல் போன 34 பேரை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஷிம்லாவில் நேற்று முன்தினம் நடந்த சாலை பணிகளின்போது ஏற்பட்ட மண் அரிப்பால், அங்குள்ள 5 அடுக்கு மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்தது. ஹமீர்பூரின் பல்லா கிராமத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், 30 தினக்கூலி தொழிலாளர்கள் உட்பட 51 பேர் சிக்கிக் கொண்டனர். தேசிய பேரிடர் மீட்பு படையினர் அவர்களை போராடி மீட்டனர்.