பரபரக்க வைத்த ஹிண்டன்பர்க் ரிப்போர்ட்: உண்மை என்ன | Hindenburg-Adani Row | SEBI | Madhabi Puri Buch
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரபல முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனம் ஹிண்டன்பர்க். பெரிய பெரிய நிறுவனங்களில் நடக்கும் நிதி, நிர்வாக முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிடுவது ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் வழக்கம். மோசடிகளை அம்பலப்படுத்துவதிலும், முதலீட்டாளர்கள் நலன் காப்பதிலும் இந்த நிறுவனத்தின் அறிக்கை உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான் இந்தியாவின் அதானி குழுமம் பல ஆண்டுகளாக முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக கடந்த ஆண்டு துவக்கத்தில் ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கை இந்தியா மட்டும் இன்றி உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் பிரதான அஸ்திரமாக இந்த விவகாரத்தை எடுத்து பேசி வந்தனர். விஷயம் பூதாகரமானதால் அதானி நிறுவன பங்குகள் பெரும் சரிவை சந்தித்தன. அதானி குழுமத்துக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. ஹிண்டனர்பர்க் குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் திட்டவட்டமாக மறுத்து வந்தது. இதற்கிடையே ஹிண்டனர்பர்க் அறிக்கை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அதானி குழுமத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. இது பற்றி செபி எனப்படும் பங்கு சந்தை ஒழுங்குமுறை ஆணயமே விசாரணை நடத்தட்டும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்தது.