மதுரை ஆதீனத்தை பதவி நீக்க இந்து மக்கள் கட்சி கோரிக்கை |Madurai aadeenam | Hindu Makkal Katchi | De
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலையில் நடந்த அனைத்துலக சைவ சித்தாந்த மாநாட்டில் பங்கேற்க மதுரை ஆதீனம் சென்னைக்கு காரில் வந்து கொண்டு இருந்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அஜீஸ் நகர் ரவுண்டானா பகுதியில் வந்தபோது ஆதீனத்தின் கார் விபத்துக்குள்ளானது. மாநாட்டில் பேசிய மதுரை ஆதீனம், தன்னை கொல்ல சதி திட்டம் நடப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டை கூறி இருந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் கொலைக்கான சதி திட்டம் இல்லை என்றும், எதிர்பாராத விதமாக நடந்த விபத்து என்றும் கூறினர். விபத்து தொடர்பாக பரபரப்பு சிசிடிவி காட்சிகளும் வெளியாகின. மதுரை ஆதீனத்தின் கார் மின்னல் வேகத்தில் சென்றது தெரியவந்தது. தவறான பாதையில் மின்னல் வேகத்தில் மதுரை ஆதீனம் கார் சென்றதால் இந்த விபத்து நடந்திருப்பதாக போலீசார் கூறினர். மதுரை ஆதீனம் கார் டிரைவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விபத்திற்குள்ளான மற்றொரு கார் டிரைவர் அளித்த புகாரின் பேரில் உளுந்தூர் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் கார் விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறிய தகவல் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது என்று மதுரை ஆதீனம் மறுப்பு தெரிவித்தார். இந்நிலையில் வேகமாக சென்றதால் நடந்த விபத்தை, கொலை செய்ய சதி என கூறி சர்ச்சையை உண்டாக்கியதாக மதுரை ஆதீனத்தை இந்து மக்கள் கட்சி வன்மையாக கண்டித்துள்ளது. ஆதீனத்தின் பேச்சில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. கொலை முயற்சி குற்றச்சாட்டு கூறிய ஆதீனத்தின் மீது பல்வேறு சந்தேகங்களும் எழுகிறது. என்னை கொல்ல தாடி வைத்த குல்லா போட்ட மத தீவிரவாதிகள் சதி திட்டமிட்டுள்ளார்கள் என்று ஒரு மதத்தின் மீது பழி போட்டு, ஒரு தவறான பொய்யான குற்றச்சாட்டை முன்வைப்பது மதுரை ஆதீன மடத்துக்கு மட்டுமல்ல திருஞானசம்பந்தர் பக்தர்களாகிய எங்களுக்கும் அவமானமாக உள்ளது. இப்படி குழப்பத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்துவது மதுரை ஆதீனமாக இருக்கும் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. வாகன விபத்து சம்பந்தமாக மதுரை ஆதீனத்தையும், அவருடன் வந்தவர்களையும், வாகனத்தை உரசிய நபர்களையும் அழைத்து உரிய முறையில் விசாரித்து உண்மை நிலையை மக்கள் மத்தியில் போலீசும், தமிழக அரசும் தெளிவுபடுத்த வேண்டும். சமீபகாலமாக மதுரை ஆதீன மடத்தை களங்கப்படுத்தும் விதமாகவும், மடத்தின் புனிதத்தை அவமானப்படுத்தும் விதமாகவும் அவரது நடவடிக்கைகளையும், செயல்பாடுகளையும் பார்க்கும்போது மதுரை ஆதீனத்துக்கு மனநலம் பாதிக்கப்பட்டது போல் தெரிகிறது. இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி மனநலம் பாதிக்கப்பட்டவரோ, குற்றச்சாட்டுக்கு உள்ளானவரோ மதுரை ஆதீனமாக இருக்க தகுதியற்றவர். எனவே மதுரை ஆதீன மடத்தின் நலனுக்காகவும், இந்து சமய வளர்ச்சிக்காகவும், மன்னர்கள், ஜமீன்தார்கள், செல்வந்தர்கள் என தானமாக கொடுத்த சுமார் ரூ.1000 கோடிக்கு மேல் இருக்கும் மதுரை ஆதீன மடத்தின் சொத்துக்களை பாதுகாக்கவும் அவரை உடனடியாக மதுரை ஆதீனம் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் சோலை கண்ணன் வலியுறுத்தி உள்ளார்.