3 நாட்கள் தீவிர சிகிச்சையில் இருந்தும் பலன் இல்லை! | House demolition | Gummidipoondi
ஆக்கிரமிப்பு அகற்றத்தை எதிர்த்து தீக்குளித்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்! திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த தேர்வழி பகுதியை சேர்ந்தவர் கல்யாணி. இவரது வீடு ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறி கடந்த 4ம் தேதி வருவாய் மற்றும் காவல்துறையினர் அகற்ற சென்றனர். அப்போது கல்யாணியின் மகன் ராஜ்குமார் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தார். வீட்டை தாழிட்டு கொண்டு பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். அதிர்ச்சியடைந்த போலீசார் கதவை உடைத்தனர். பலத்த தீக்காயமடைந்த ராஜ்குமாரை கும்மிடிப்பூண்டி அரசு ஆஸ்பிடலுக்கு கொண்டு சென்றனர். மேல்சிகிச்சைக்காக ராஜ்குமார் கீழ்பாக்கம் ஆஸ்பிடலுக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆக்கிரமிப்பு அகற்றத்தில் கவனக் குறைவாக இருந்த வட்டாட்சியர் ப்ரீத்தி, வருவாய் ஆய்வாளர் கோமதி, விஏஓ பாக்ய ஷர்மா ஆகிய மூவரை பணியிட மாற்றம் செய்தும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் கலெக்டர் பிரபு சங்கர் உத்தரவிட்டார். இந்நிலையில் 3 நாட்களாக சிகிச்சையில் இருந்த ராஜ்குமார் இறந்தார். ஆக்கிரமிப்பு அகற்றத்தை எதிர்த்து இளைஞர் தீக்குளித்த இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.