பயிற்சியின்போது கீழே விழுந்த விமானம்: உயிர் தப்பிய பைலட் IAF| Indian airforce aircraft crashed
சென்னை தாம்பரம் விமானப்படை தளத்துக்கு சொந்தமான PC-7 Mk II என்ற சிறிய ரக பயிற்சி விமானம் வழக்கம்போல் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பறந்து கொண்டு இருந்தபோது, திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த விமானம், உப்பளம் பகுதி அருகே கீழே விழுந்து நொறுங்கியது. விமானத்தில் இருந்த பைலட் முன்னெச்சரிக்கையாக, பாராசூட் மூலம் கீழே குதித்து உயிர் தப்பி உள்ளனர். ஆட்கள் இல்லாத காலி இடத்தில் விமானம் விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. பாராசூட் மூலம் தரையிறங்கிய பைலட்டுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ராணுவ ஹெலிகாப்டர் வந்து அவரை அங்கிருந்து அழைத்து சென்றது. விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை நடப்பதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. முன்னதாக, நேற்று வானில் பறந்து கொண்டிருந்த சிறிய ரக பயிற்சி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், புதுக்கோட்டை கீரனுார் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தரை இறக்கப்பட்டது. இந்த பரபரப்பு அங்குவதற்குள், இன்று பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கி உள்ளது.