'சிவராத்திரி...' பாடல் விவகாரம் நடிகை வனிதா மீது வழக்கு illayaraja| mrs & mr film| actoress vanitha
நடிகை வனிதா இயக்கி உள்ள மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆனது. அந்த படத்தில் அவர் நடித்தும் இருக்கிறார். அவரது மகள் ஜோவிகா தயாரித்துள்ளார். இந்த படத்தில் சிவராத்திரி தூக்கம் ஏது.. என்ற பாடல் இடம் பெற்றுள்ளது. இந்த பாடல், கமல்ஹாசன் நடித்த மைக்கேல் மதன காமராசன் படத்துக்காக, இளையராஜா கம்போஸ் செய்தது. தமது அனுமதி இல்லாமல், அந்த பாடலை பயன்படுத்தி இருப்பதாக கூறி, நடிகை வனிதா மீது இளையராஜா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். படத்தில் இருந்து அந்த பாடலை நீக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இல்லையேல், நஷ்டஈடு கேட்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்த வழக்கு 14ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. நேற்று பத்திரிகையாளர்களுக்கு மிஸஸ் அண்ட் மிஸ்டர் ஸ்பெஷல் ஷோ திரையிடப்பட்டது. அப்போதே, அந்த பாடலுக்கான அனுமதி பெறப்பட்டதா என்பது பற்றி வனிதாவிடம் கேட்கப்பட்டது. இளையராஜாவை சந்தித்து ஆசி பெற்றோம்; ஆனால், பாடல் பற்றி எதுவும் பேசவில்லை என்றார். அந்த பாடலுக்கான உரிமம் பெற்றுள்ள சோனி மியூசிக் நிறுவனத்திடம் அதற்கான உரிமத்தை வாங்கி உள்ளோம். பாடலை பயன்படுத்திற்கு எதிராக இளையராஜா வழக்கு தொடர்ந்தால் அதை எதிர்கொள்ள தயார் என்றும் வனிதா கூறியிருந்தார். சமீபகாலமாக புதிய படங்கள் ஹிட் ஆகிறதோ இல்லையோ, பழைய பாடல்களை பயன்படுத்தி வரவேற்பை பெற்று வருகின்றனர். அதிலும் குறிப்பாக, இளையராஜாவின் பாடல்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. தமது அனுமதியின்றி பாடல்கள் பயன்படுத்தியதாக, சில படங்களுக்கு நஷ்டஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். மலையாள படமான மஞ்சும்மெல் பாய்ஸ், அஜித்தின் குட்பேட் அக்லி படங்களில் பயன்படுத்தி பாடல்களுக்கு கூட இளையராஜா நஷ்டஈடு கேட்டு ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ளார்.