நீலகிரியில் தங்க புதையல்? சத்தமில்லாமல் நடக்கும் சம்பவம் |Illegal Gold Mining |Nilgiris Crackdown
நீலகிரி மாவட்டம் தேவாலா, பந்தலூர் பகுதிகளில், தங்க படிமங்கள் இருப்பது கடந்த 1831ல் கண்டறியப்பட்டது. லண்டனை சேர்ந்த ஹூகேனின் என்பவர், ஆல்பா கோல்டு மைனிங் கம்பெனி தொடங்கினார். அங்கே சுரங்க பாதைகள் அமைத்து, தங்கத்தை வெட்டி எடுத்துச் சென்றனர். 1893க்கு பிறகு நீலகிரியில் தங்க படிமத்தின் அளவு குறைந்தது. தங்கம் எடுப்பதற்கு ஆகும் செலவு அதிகமானதால் சுரங்க பாதைகள் மூடப்பட்டது. தொடர்ந்து 1901ல் மீண்டும் தங்கம் எடுக்க முயற்சி நடந்தது. ஆனால் திட்டம் கைவிடப்பட்டது. அதன் பிறகு பெரிய அளவில் தங்கம் படிமம் எடுக்கும் பணி தொடங்கப்படவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டப்படுகிறது. தங்கம் விலை உச்சத்தை தொட்டுள்ள நிலையில் நீலகிரியில் பல கும்பல்கள் முகாமிட்டுள்ளன. கைவிடப்பட்ட தங்க சுரங்கங்களை தேடி செல்கின்றனர். நாடுகாணி, தேவாலா, கைதகொல்லி, பொன்வயல், காட்டி மட்டம், கிளன்ராக் பகுதிகளில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சட்டவிரோத சுரங்க குழிகள் தோண்டப்பட்டுள்ளது. அங்கே தங்க படிமங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சட்டவிரோத தங்க சுரங்க குழிகளில் சிக்கி மூச்சு திணறல், மண் மற்றும் பாறைகள் சரிந்து பலர் இறந்துள்ளனர். தங்க படிமம் எடுக்க சுமார் 80 முதல் 200 அடி வரை சுரங்கக் குழிகள் அமைத்து, மண் மற்றும் கற்களை மேலே கொண்டு வருகின்றனர். கற்களை அரைத்து தூகள்களாக மாற்றி, பாதரசம் மூலம் தங்க படிமங்களை பிரித்து எடுத்து விற்பனை செய்கின்றனர்.