டில்லியில் பிடிபட்ட வங்கதேசத்தினரை திருப்பி அனுப்பும் பணி தீவிரம்! Illegal Immigrants arrest | Bang
இந்தியாவில் சட்ட விரோதமாக குடியேறியுள்ள வங்கதேசத்தினரை கண்டறிந்து அவர்களை வெளியேற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. டில்லி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நுாற்றுக்கணக்கான வங்கதேசத்தினர் குடும்பம் குடும்பமாக தங்கியிருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடந்த 10 நாட்களாக டில்லியின் தென்மேற்கு காவல் மாவட்டத்தை சேர்ந்த போலீசார், சரோஜினி நகர், கிஷன்கர், எஸ்ஜே என்கிளைவ், சகார்பூர், டில்லி கன்டோன்மென்ட் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த சிலர் மீது சந்தேகம் வலுத்தது. அவர்களின் அடையாள ஆவணங்களை போலீசார் சோதித்தனர். ஆதார் அட்டை காண்பித்த சிலரிடம் வேறு சில ஆவணங்களை காட்டும் படி போலீசார் விசாரணையை தொடர்ந்தனர். அவர்களின் வீடுகளில் நடத்திய சோதனையில், வங்கதேச அடையாள அட்டைகள் சிக்கின. அந்த வகையில், 88 பேர் சிக்கினர். அவர்கள் அனைவரும் சட்டவிரோத நம் நாட்டுக்குள் புகுந்து, டில்லியில் குடியேறியது தெரிந்தது. 88 பேரையும் கைது செய்த போலீசார், வெளிநாட்டினர் பற்றிய பதிவுக்காக மத்திய அரசு அதிகாரிகளிடம் தகவல்களை பகிர்ந்தனர். கடந்த 10 நாட்களாக நடந்த சோதனையில் 88 வங்கதேச நாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில், கடந்த ஆண்டு டிசம்பர் முதல் தற்போது வரை மொத்தம் 142 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக டில்லி போலீசார் கூறினர்.