பாகிஸ்தான் கடற்படையை இந்தியா கதறவிட்ட பகீர் கதை | ind vs pak | ins vikrant | arabian sea | pahalgam
காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொடிய தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை குறி வைத்து இந்தியா குண்டு வீசியது. 9 முகாம்கள் தகர்க்கப்பட்டன. பயங்கரவாத கும்பலுக்கு ஆதரவாக இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றதால் போர் மூண்டது. பாகிஸ்தான் தாக்க ஆரம்பித்ததும் இந்தியா பெரிய அளவில் பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் குண்டு வீச்சை நேர்த்தியாக தடுத்தது. அதே நேரம் தடுக்கவே முடியாத அளவு பாகிஸ்தானில் துல்லிய தாக்குதலை நம் ராணுவம் நடத்தியது. அந்த நாட்டின் முக்கிய ராணுவ முகாம்கள், விமானப்படை தளங்கள் குண்டு வீசி தகர்க்கப்பட்டன. இந்தியாவின் அடியை தாங்க முடியாத பாகிஸ்தான் வெறும் 4 நாளில் போரை நிறுத்தும்படி நம் நாட்டிடம் கெஞ்சியது. இதையடுத்து தான் போர் நிறுத்தம் வந்தது. இந்தியா அடித்ததில் பாகிஸ்தானுக்கு எவ்வளவு பெரிய சேதம் என்பதை அடுத்தடுத்து வெளியான சாட்டிலைட் புகைப்படங்கள் காட்டின. இந்திய ராணுவம் மட்டும் இன்றி உலகம் முழுதும் உள்ள பாதுகாப்பு நிபுணர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் இந்தியாவின் நேர்த்தியான தாக்குதலையும், பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட பேரிழப்பையும் தொடர்ந்து ஆதாரங்களுடன் வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் தான் அரபிக்கடலில் நம் போர் விமானங்கள் களம் இறங்கியதும், கராச்சி கடற்படை தளத்தை காலி செய்து விட்டு, துண்டை காணோம்; துணியை காணோம் என பாகிஸ்தான் அலறியடித்து ஓடிய தகவல் ஆதாரத்துடன் வெளிச்சத்துக்கு வந்து இருக்கிறது. அப்படி என்ன நடந்தது என்பதை பார்க்கலாம். காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடந்தது சரியாக ஏப்ரல் 22ம் தேதி. வந்தது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தான் என்று தெரிந்ததும், திருப்பி அடிப்போம் என்று இந்தியா எச்சரித்தது. இதனால் அன்று முதலே பாகிஸ்தான், இந்தியா இடையே பதற்றம் ஏற்பட ஆரம்பித்தது. நம் முப்படைகளும் தனித்தனியாக போர் பயிற்சியில் இறங்கின. பாகிஸ்தானும் ஒத்திகை நடத்தியது. குறிப்பாக அரபிக்கடல் பகுதி போர் பதற்றத்தில் மூழ்கியது. அங்கு இந்தியாவை மிரட்டும் வகையில், போர் கப்பல்களை வைத்து ஒத்திகை செய்யப்போவதாகவும், ஏவுகணை சோதனை நடத்துவதாகவும் பாகிஸ்தான் அறிவித்தது. இந்தியா அசரவில்லை. பாகிஸ்தான் ஒத்திகை பார்த்த அதே அரபிக்கடலில் இந்தியாவும் ஸ்கெட்ச் போட்டது. கடற்படையை பொறுத்தவரை பாகிஸ்தானால் இந்தியாவின் பக்கத்தில் கூட வர முடியாது. அந்த அளவுக்கு நம் கடற்படை வலிமையானது. ஒவ்வொரு போர் கப்பலாக அரபிக்கடலில் இறக்கியது இந்தியா. முதலில், ஐஎன்எஸ் சூரத் போர் கப்பலை அரபிக்கடலுக்கு கொண்டு சென்றது. இஸ்ரேலுடன் சேர்ந்து தயாரித்த ஏவுகணையை அங்கு சோதனை செய்தது. அடுத்ததாக, நம்மிடம் இருக்கும் மிகப்பெரிய விமானம் தாங்கி போர் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தையும் அதே அரபிக்கடலுக்கு கொண்டு வந்தது. இந்தியாவின் மிக சக்தி வாய்ந்த போர் கப்பல் என்றால் இதுதான். பின்னர் ஐஎன்எஸ் கொல்கத்தா, ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் கிரிவாக் என அடுத்தடுத்து முக்கிய போர் கப்பல்களும் அரபிக்கடல் வந்தன. இந்த கப்பல்களில் இருந்து நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை இந்தியா சோதனை செய்து பாகிஸ்தானை பதற வைத்தது. குறிப்பாக தாழ்வாக பறந்து சென்று துல்லியமாக அடிக்கும் பிரமோஸ் ரக ஏவுகணைகளையும் சோதனை செய்தது. இது ஒரு பக்கம் நடந்து கொண்டு இருந்த நேரத்தில், சரியாக மே 7 மற்றும் மே 8ம் தேதிக்கு நடுவே, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து பயங்கரவாதிகள் முகாம்களை மட்டும் குறி வைத்து இந்தியா துல்லியமாக தாக்கியது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் முகாம்களை குறி வைத்து தாக்கினோம்; எந்த ராணுவ இலக்கையும் குறி வைக்கவில்லை என்று பாகிஸ்தானுக்கு இந்தியா தகவல் சொன்னது. ஆனால் நாங்களும் பதிலடி தருவோம் என்பது போல் பாகிஸ்தான் அடாவடி காட்டியது. சொன்னது மட்டும் இல்லாமல் எல்லையில் ட்ரோன், ஏவுகணை தாக்குதலை நடத்த ஆரம்பித்தது. ஏற்கனவே தயார் நிலையில் இருந்த நம் வான் பாதுகாப்பு அமைப்புகள் தாக்குதலை நேர்த்தியாக முறியடித்தன. பதிலுக்கு பாதிஸ்தானை இந்தியா திருப்பி அடிக்க ஆரம்பித்தது. சக்தி வாய்ந்த குண்டுகளை வீசி ஓட ஓட அடித்தது. இந்த நேரத்தில் கராச்சியில் இருந்து பாகிஸ்தான் புறமுதுகிட்டு ஓடி இருக்கிறது. அதாவது, எல்லையில் ராணுவம், விமானப்படைகளும் பாகிஸ்தானில் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தின. அதே நேரத்தில் ஏற்கனவே அரபிக்கடலில் களம் இறங்கிய நம் போர் கப்பல்கள் கராச்சியை குறி வைத்து மேலிட உத்தரவுக்காக காத்திருந்தன. இந்தியாவின் கடற்படையும் தாக்குதலில் இறங்கினால் கராச்சி கதை கந்தலாகி விடும் என்பதை உணர்ந்த பாகிஸ்தான், பயத்தில் பதறியடித்து இருக்கிறது. அதுவரை வாய் சவடால் விட்ட பாகிஸ்தான், கராச்சி கடற்படை தளத்தில் இருந்து கிழக்கே இந்தியாவை நோக்கி போர் கப்பல்களை அனுப்புவதற்கு பதில் மேற்கு நோக்கி புறமுதுகிட்டு ஓடி இருக்கிறது. அதாவது கடற்படையில் இருந்த முக்கிய போர் கப்பல்களை எல்லாம் 8ம் தேதியே அவசர அவசரமாக எடுத்து சென்று, வணிக ரீதியாக செயல்படும் கராச்சி துறைமுகத்துக்கு மாற்றியது. அங்கு சரக்கு ஏற்றி, இறக்கும் கப்பல்களுக்கு நடுவே போர் கப்பல்களை நிறுத்தி வைத்தது. கடற்படையை தான் இந்தியா தாக்கும். வணிக ரீதியிலான துறைமுகத்தை தாக்காது என்று கணக்கு போட்டு அங்கு கொண்டு போர் கப்பல்களை பதுக்கியது. இந்தியாவின் தாக்குதலுக்கு பயந்து இன்னும் பாதி கப்பல்களை கராச்சியில் இருந்து 100 கிலோ மீட்டர் தூரத்தில் ஈரான் எல்லைக்கு பக்கத்தில் உள்ள குவாடார் வணிக துறைமுகத்துக்கு இடம் மாற்றியது. 10ம் தேதி கராச்சி கடற்படை முற்றிலும் காலியானது. போர் கப்பல்களும், சண்டைக்கான தளவாடங்களும் மொத்தமாக இடம் மாற்றம் செய்யப்பட்டன. இந்தியாவை எதிர்த்து சண்டை செய்வதற்கு பதில் கடற்படையை காலி செய்து விட்டு பாகிஸ்தான் ஓடியதை சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் சிலர் இப்போது மோப்பம் பிடித்து விட்டனர். தொடர்ச்சியாக சாட்டிலைட் படங்களை ஆய்வு செய்து வந்த போது தான் இந்த தகவல் தெரியவந்து இருக்கிறது. 8ம் தேதி கராச்சி கடற்படையில் இருந்த முக்கிய போர் விமானங்கள் வணிக துறைமுகத்துக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டதையும், பாதி போர் விமானங்கள் 100 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குவாடர் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டதையும் காட்டும் சாட்டிலைட் படங்களை அவர்கள் வெளியிட்டுள்ளனர். அதே போல் 10ம் தேதி மொத்த கராச்சி கடற்படையும் காலியாக கிடக்கும் சாட்டிலைட் படங்களும் வெளியாகி உள்ளன. போர் வெடிப்பதற்கு 6 மாதம் முன்பு தான் சீனா கொடுத்த சுல்பிக்கார் ரக போர் கப்பல்களை வைத்து அரபிக்கடலில் பாகிஸ்தான் படம் காட்டியது. உள் நாட்டிலேயே தயாரித்த பி282 என்ற ரக பாலிஸ்டிக் ஏவுகணைகளை அதில் இருந்து ஏவி சோதனை செய்தது. அந்த ஏவுகணை 350 கிலோ மீட்டர் பறந்து சென்று தாக்கும் வல்லமை கொண்டது என்று வீடியோ வெளியிட்டும் பாகிஸ்தான் மார்தட்டி இருந்தது. சும்மா இருக்கும் போது சோதனை செய்த பாகிஸ்தான், போர் மூண்ட போது சண்டைக்கு வராமல், இந்தியாவின் அடிக்கு பயந்து புறமுதுகிட்டு ஓடிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.