இந்தோனேஷிய அதிபருடன் பிரதமர் மோடி ஆலோசனை India - Indonesia leaders meet| Modi | Prabowo Subianto |
குடியரசு தின விழாவில் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியான்டோ சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். டெல்லி வந்துள்ள அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் இந்தோனேசிய அதிபரை வரவேற்றனர். ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில், அதிபர் சுபியான்டோ அஞ்சலி செலுத்தினார். ஐதராபாத் இல்லத்தில், பிரதமர் மோடி - அதிபர் சுபியான்டோ ஆலோசனை நடத்தினர். அதன் பின் இரு நாட்டு அரசு பிரதிநிதிகள் முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து ஆலோசித்தனர். ஆலோசனைக்கு பின் இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக பேட்டி அளித்தனர். பிரதமர் மோடி பேசும்போது, நம் நாட்டின் முதல் குடியரசு தின விழாவில் இந்தோனேசியாவை சேர்ந்த தலைவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். 75 ஆண்டுகளுக்கு பின் இந்தோனேசிய அதிபர் சிறப்பு விருந்தினராக பங்கேற்பது மிகழ்ச்சியும், பெருமையும் அளிக்கிறது எனக்கூறினார். கடல் சார் பாதுகாப்பு, பயங்கரவாத ஒழிப்பு, ராணுவம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகள் இணைந்து செயல்படும். இரு நாடுகளின் தொழில், வர்த்தகத்தை மேம்படுத்துவது பற்றி பேசினோம் என மோடி தெரிவித்தார். நிதி, செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பம் ஆகிய துறைகளில், இரு நாடுகளின் பங்களிப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். விவசாயம், உணவுப் பொருள் பாதுகாப்பு துறைகளில் இந்தியாவின் அனுபவத்தை இந்தோனேசியாவுடன் பகிர முன்வந்துள்ளோம்.