பொய் தகவல் பரவுவதை தடுக்க மத்திய அரசு தீவிர முயற்சி! India Pakistan Clash | Fake News | Indian Gove
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, பாகிஸ்தான் பயங்கரவாதிகளை குறிவைத்து, ஆபரேஷன் சிந்துார் என்ற பெயரில் துல்லிய தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதையடுத்து கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து ஏவுகணைகள், ட்ரோன்கள் செலுத்தி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு நம் படைகள் பதிலடி தந்தன. இதில் ராணுவம், விமானப்படை, கடற்படை என, முப்படைகளும் ஈடுபட்டன. அதே நேரத்தில் மற்றொரு பக்கம், ஊடகங்கள், சமூக வலைதளங்களில் போலி மற்றும் தவறான தகவல்களை பாகிஸ்தான் பரப்பி வருகிறது. இதை தடுக்கும் வகையில், மத்திய அரசின், பி.ஐ.பி. எனப்படும் பத்திரிகை தகவல் மையத்தின் உண்மை கண்டறியும் பிரிவு, நான்காம் படையாக செயல்பட்டு வருகிறது. ஆபரேஷன் சிந்துார் நடந்ததில் இருந்து, பாகிஸ்தானின் சமூக வலைதளங்களில் பல செய்திகள், படங்கள், வீடியோக்கள் வெளியிடப்பட்டன. இந்தியாவுக்கு எதிரானதாக இருப்பதோடு, இவை போலியானவை, தவறானவை மற்றும் உண்மைக்கு புறம்பானவை. கடந்த பல ஆண்டுகளாகவே, இந்தியாவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பாகிஸ்தான் இவ்வாறு விஷமத்தனத்தில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் மோசமாக நடத்தப்படுவதாகவும், அவர்களது உரிமைகள் பறிக்கப்படுவதாகவும் பொய்யான தகவல்களை, சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறது. பதற்றமான சூழலில், இந்த பொய் தகவல்களை பரப்புவது மிகவும் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக, பி.ஐ.பி.யின் உண்மை கண்டறியும் பிரிவு, மிகத் தீவிரமாக கண்காணித்து, செய்திகளின் நம்பகத்தன்மை குறித்து உடனடியாக வெளியிட்டு வருகிறது. கோவிட் பரவல் காலத்தில் இதுபோல் போலியான, மக்களை திசைதிருப்பும் பொய்யான பல தகவல்கள் வெளியாயின. அப்போது மக்களுக்கு உண்மையை தெரிவிக்கும் நோக்கத்துடன் பி.ஐ.பி.யின் இந்தப் பிரிவு செயல்பட்டது. மத்திய அரசின் பல்வேறு துறைகளிலும் இதற்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்படுபவர்களாக இருப்பர். சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவல்கள் உடனடியாக, துறை உயரதிகாரிகள் வாயிலாக சரிபார்க்கப்பட்டு, அதன் நம்பகத்தன்மை குறித்து செய்தி வெளியிடப்படுகிறது. இதைத் தவிர, பல்வேறு ஊடகங்களில் உள்ள மூத்த நிருபர்கள், பத்திரிகையாளர்களுடன் தொடர்பு கொண்டு, செய்திகளின் நம்பகத்தன்மை குறித்து ஆராயப்படுகிறது. தற்போதுள்ள பல நவீன தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்பட்டு, செய்திகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு, அதன் உண்மைத்தன்மை சோதிக்கப்படுகிறது. இதற்கிடையே, ராணுவத்திலும் தகவல் போர் பிரிவு என்பது இரண்டு ஆண்டுக்கு முன் உருவாக்கப்பட்டது. இந்தப் பிரிவும், சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகளை பகுப்பாய்வு செய்து, அதன் உண்மைத்தன்மை குறித்து தகவல் தருகிறது. சமூக வலைதள நிறுவனங்களுடன் இணைந்தும், செய்திகளை பி.ஐ.பி. பகுப்பாய்வு செய்கிறது. மேலும், செய்திகளின் நம்பகத்தன்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதிவுகளையும், சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறது. தற்போதைக்கு, பாகிஸ்தானின் முயற்சிகளுக்கு, தடுப்பு நடவடிக்கைகளே எடுக்கப்பட்டன. முப்படைகள், பாகிஸ்தானில் துல்லிய தாக்குதல் நடத்தியது போல், எதிர்காலத்தில் நான்காம் படையும் துல்லிய தாக்குதல் நடத்துவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்த, மத்திய அரசு முயற்சிகள் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.