உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போர் பதற்ற ஒத்திகை அறிவிப்பு: உச்ச கட்ட பீதியில் எல்லை மக்கள் Centre asked states security mock d

போர் பதற்ற ஒத்திகை அறிவிப்பு: உச்ச கட்ட பீதியில் எல்லை மக்கள் Centre asked states security mock d

பஹல்காமில் ஏப்ரல் 22ம்தேதி சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலை தொடர்ந்து, பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்து வரும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது. சிந்து நதிநீர் நிறுத்தம், விசா ரத்து, அட்டாரி எல்லை மூடல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்ததோடு, பாகிஸ்தான் சென்ற இந்தியர்களை உடனடியாக திரும்பி வரவும் உத்தரவிட்டது. பயங்கரவாதிகள் மற்றும் அவர்களது பின்னால் இருந்து தூண்டி விடுபவர்கள் கற்பனையில் நினைத்திராத அளவுக்கு பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி ஆவேசமாக கூறினார். இந்நிலையில், பிரதமர் மோடி கடந்த 3 நாட்களாக முப்படைகளின் தலைமை தளபதிகளை தனித்தனியாக சந்தித்து ஆலோசித்து வருகிறார். அப்போது, பயங்கரவாதத்தை தூண்டி விடும் பாகிஸ்தானுக்கு எந்த வகையில் பதிலடி கொடுக்கலாம் என ஆலோசிக்கப்பட்டதாகவும், இந்த விஷயத்தில் முப்படைகளுக்கு முழு சுதந்திரத்தை மோடி கொடுத்துள்ளதாகவும் டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன் தொடர்ச்சியாக இன்று ராணுவ செயலாளர் ராஜேஷ்குமார் சிங்குடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இதனால் இரு நாடுகளிடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த பரபரப்பான சூழலில், இரு நாடுகளின் எல்லைக் கோட்டில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து வாலாட்டி வருகிறது. இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து 11 வது நாளாக துப்பாக்கிச் சூடு நடத்தியும், சிறிய ரக குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவமும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு தக்க பதிலடியை கொடுத்து வருகிறது. இதனால் காஷ்மீரில் எல்லையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில், வரும் 7ம் தேதி போர் பாதுகாப்பு ஒத்திகையை நடத்தும்படி பல மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் இன்று உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவில் ஐந்து வழிகாட்டுதல்கள் இடம்பெற்றுள்ளன. 1. விமான தாக்குதல் நடக்கும் சமயங்களில் சைரன் ஒலி எழுப்பப்படும். மக்களை உஷாராக இருக்கும்படி எச்சரிப்பதற்காக சைரன் ஒலி எழுப்பப்படும். இந்த ஒத்திகையின்போது விமானப்படையின் தயார்நிலையை உறுதிப்படுத்த வேண்டும். 2. எதிரி நாடு போர் தொடுக்கும் பட்சத்தில் மக்கள் தங்களை எப்படி தற்காத்துக் கொள்வது என்பது பற்றி மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் மாநில அரசுகள் உரிய பயிற்சிகளை அளிக்க வேண்டும். இந்த ஒத்திகை மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கும். 3. போர் நடக்கும்போது திடீரென மின் தடை ஏற்படும். அப்படிப்பட்ட சமயங்களில் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை எந்தெந்த வகையில் தவிர்க்க முடியும் என்பதற்கான ஒத்திகையை நடத்திப் பார்க்க வேண்டும். குறிப்பிட்ட இடங்களில் குறிப்பிட்ட நேரத்தில் மின்தடையை ஏற்படுத்தி ஒத்திகை பார்ப்பதற்கான ஏற்பாடுகளை மாநில அரசுகள் எடுக்க வேண்டும்.4. முக்கியமான தொழிற்சாலைகள் மற்றும் ராணுவ முகாம்கள் உள்ளிட்ட ராணுவம் சம்பந்தமான கட்டமைப்புகள் உள்ளிட்டவற்றை எதிரிகளின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆலைகளை், ராணுவ கட்டமைப்புகளை சுற்றுப்புறத்துக்கு ஏற்றவாறு நிறம் மாற்றி உருமாற்றும் நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுக்க வேண்டும். 5. எதிரிகளால் தாக்கப்படும் பகுதிகளில் இருந்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான ஒத்திகையை நடத்திப் பார்க்க வேண்டும். மக்களை அவசரமாக பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான வழிகளை உருவாக்க வேண்டும். வெளியேற்றப்படும் மக்கள் தங்குவதற்கான புதிய வசிப்பிடங்களை உருவாக்க வேண்டும். இந்த ஒத்திகை மூலம் மக்கள் பாதிப்பை குறைப்பதற்கான வழிவகைகளை மாநில அரசுகள் முன்கூட்டியே ஆராய்ந்து திட்டங்களை உருவாக்க வேண்டும் என பாகிஸ்தானை ஒட்டியுள்ள பல மாநிலங்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவுகளை வழங்கியுள்ளது. பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பஞ்சாப் மாநிலத்தில் ஏற்கனவே ராணுவம் சார்பில் போர் பாதுகாப்பு ஒத்திகை செய்யப்பட்டது.

மே 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை