இந்தியா-சீனா சண்டையில் மிகப்பெரிய திருப்பம் | India vs China | galwan clash 2020 | Modi Jinping meet
2020ல் கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ரோந்து சென்ற இந்திய ராணுவ வீரர்கள் மீது சீன ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது. எல்லை தாண்டி வந்து தாக்கியதில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். அவர்கள் திருப்பி தாக்கியதில் சீன வீரர்கள் 40 பேர் வரை கொல்லப்பட்டனர். இதையடுத்து இரு நாடுகளும் எல்லையில் படைகளை குவித்தன. இந்திய நிலப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்திருந்த சீன படையினர் அங்கு கூடாரங்கள் அமைத்து தங்கினர். அதை ஒட்டிய இடங்களில் நமது ராணுவத்தினரும் கூடாரங்கள் அமைத்து முகாமிட்டனர். இரு தரப்பும் சாலை அமைத்து வாகனங்களில் ஆயுதங்களை கொண்டு வந்து சேர்த்ததால், அப்பகுதியில் எந்த நேரமும் சண்டை மூளக்கூடிய பதற்றமான சூழல நிலவி வந்தது. அடுத்தடுத்து அரசியல், பொருளாதார ரீதியில் இரு நாடுகள் எடுத்த நடவடிக்கை உறவை மேலும் சிக்கலாக்கியது. மோதல் போக்கு இரு நாடுகளுக்குமே பாதிப்பை ஏற்படுத்தியதால், பதற்றத்தை தணித்து சகஜநிலையை மீட்க பேச்சுவார்த்தை நடந்தது. தூதரக ரீதியாகவும், ராணுவ அதிகாரிகள் மட்டத்திலும் பல சுற்று பேச்சுகள் நடந்தன. அதன் விளைவாக 2020 க்கு முன்பிருந்த நிலைக்கு இரு ராணுவமும் திரும்புவது என்ற இலக்கை நோக்கி பயணிக்க, கடந்த திங்களன்று ஓர் உடன்பாடு ஏற்பட்டது. அதன் முதல் கட்டமாக டெப்சாங் மற்றும் டெம்சோக் பகுதிகளில் முகாமிட்டுள்ள வீரர்களை திருப்பி அழைக்க இரு ராணுவமும் சம்மதித்தன. ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டின் நடுவே சந்தித்து பேசிய பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இந்த உடன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்தனர். இதையடுத்து உடன்பாடு நேற்று செயலுக்கு வந்தது. கூடாரங்கள் அகற்றப்பட்டு வீரர்கள் திரும்ப துவங்கினர்.