பாகிஸ்தானை அலறவிடும் இந்தியாவின் அட்டாக் ட்ரோன் | india vs pak | trikaal attack drone | op sindoor
காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே மிகப்பெரிய போர் வெடித்தது. பாகிஸ்தானின் ராணுவ படை தளங்கள், விமானப்படை தளங்களை இந்தியா குண்டு வீசி பந்தாடியது. அடிதாங்க முடியாமல் இந்தியாவிடம் கெஞ்சி போரை நிறுத்தியது பாகிஸ்தான். இந்த போரில் ஏவுகணைகள் முக்கிய பங்கு வகித்தன. அதே போல் ட்ரோன்களில் பங்கும் மிகப்பெரிய அளவில் இருந்தது. இந்தியா மீது மட்டும் கிட்டத்தட்ட 550 ட்ரோன்களை பாகிஸ்தான் ஏவி விட்டது. இதில் 500க்கும் மேற்பட்டவை கடைசி நேரத்தில் துருக்கி கொடுத்தது. எல்லா ட்ரோன்களையும் நடுவானிலேயே இடைமறித்து நம் ராணுவம் அழித்து விட்டது. பதிலுக்கு பாகிஸ்தான் மீது நம் ராணுவமும் ட்ரோன் தாக்குதலை நடத்தியது. உள்ளூரில் தயாரித்த அட்டாக் ட்ரோன் மற்றும் இஸ்ரேல் தந்த சூசைட் ட்ரோன்களை வைத்து பாகிஸ்தானை அடித்தோம். இதற்கு நல்ல ரிசல்ட் கிடைத்தது. குறிப்பாக, பாகிஸ்தானின் ரேடார் கட்டமைப்புகளை தகர்க்க ட்ரோன்கள் பெரிய அளவில் நமக்கு கைகொடுத்தன. இதனால் பல விதமான ட்ரோன்களை உள்ளூரிலேயே தயாரிக்கும் பணியை மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது. அந்த வகையில் ட்ரைகால் மேக்ஸ் Trikaal Max என்னும் உளவு மற்றும் அட்டாக் ட்ரோன்கள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடக்கிறது. பாகிஸ்தானை பதம் பார்ப்பதற்கு என்றே இந்த வகை ட்ரோன்களை சூரத்தை சேர்ந்த இன்சைட் எப்பிவி கம்பெனி தயாரித்து வருகிறது. இந்த ட்ரோன்கள் ஒரே நேரத்தில் 6 வகையான வெடி குண்டுகளை தூக்கி சென்று எதிரி நாட்டின் மீது போடும் சக்தி படைத்தது. அதிகபட்சம் 11 கிலோ வெடிகுண்டுகளை சுமந்து செல்ல முடியும். தரையில் இருந்து 19,000 அடி உயரம் வரை பறக்கும் திறன் கொண்டது. மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும். ட்ரோனில் தெர்மல் சென்சார் உள்ளது. எனவே இரவு நேரத்திலும் இந்த ட்ரோனால் துல்லியமாக பார்க்க முடியும். எவ்வளவு இருட்டு என்றாலும், இலக்கை துல்லியமாக தாக்கும். மைனஸ் 10 டிகிரி செல்சியஸ் முதல் 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் கூட இந்த வகை ட்ரோனால் திறமையாக செயல்பட முடியும். இதில் இன்னொரு சிறப்பும் உண்டு. கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி இலக்குகளை ராணுவ வீரர்களே தேர்வு செய்ய முடியும். ட்ரோனில் உள்ள கேமரா, தான் படம்பிடிப்பதை லைவாக கட்டுப்பாட்டு அறைக்கு ஒளிபரப்பும். அந்த காட்சிகளை பிரத்யேக கண்ணாடிகள் அணிந்து ராணுவ வீரர்கள் பார்ப்பர். இதன் மூலம் இலக்கு இருக்கும் திசைக்கு ட்ரோனை செலுத்தி துல்லியமாக குண்டு வீச முடியும். ஒரு இலக்கில் குண்டு போட்ட பிறகு அடுத்த இலக்கை நோக்கி ட்ரோனை செலுத்தலாம். இப்படியே 6 குண்டுகளையும் தேவைப்படும் இலக்கில் வீச முடியும். எதிரிகளை பந்தாடுவதற்கு மட்டும் இன்றி எதிரி நாட்டை உளவு பார்ப்பதற்கும் இந்த வகை ட்ரோன்களை பயன்படுத்தலாம் என்று இன்சைட் எப்பிவி நிறுவனம் கூறி உள்ளது. ட்ரைகால் மேக்ஸ் ட்ரோனின் சக்தி அபாரமானது. இந்தியாவின் பாதுகாப்பில் இது முக்கிய பங்கு வகிக்கும். குறிப்பாக, பாகிஸ்தானை தாக்குவதற்கு பெரிய அளவில் கை கொடுக்கும் என்று நம் ராணுவ வட்டாரம் கூறியது.