உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்தியாவுக்கு வரி போட்டது இதற்கா? US நரி தந்திரம் india vs us trade war sergio gor | trump vs modi

இந்தியாவுக்கு வரி போட்டது இதற்கா? US நரி தந்திரம் india vs us trade war sergio gor | trump vs modi

வர்த்தக காரணங்களுக்காக 25 சதவீதம், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக 25 சதவீதம் என இந்தியாவுக்கு 50 சதவீத வரி போட்டு தீட்டினார் டிரம்ப். அவர் போட்ட அடாவடி வரிக்கு பிறகு இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவில் பெரிய அளவில் விரிசல் விழுந்தது. அதே நேரம் சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில், இந்தியா, சீனா இடையே முன்பு எப்போதும் இல்லாத அளவு நெருக்கம் ஏற்பட்டது. எதிர் எதிர் துருவங்களாக இருந்த இரு நாடுகளும் காட்டிய நெருக்கம் அமெரிக்காவின் உறக்கத்தை கலைத்தது. அதுவரை அடாவடி, ஆவேசம் காட்டிய டிரம்ப் மற்றும் அவரது சகாக்கள் இப்போது வரிசையாக அந்தர் பல்டி அடிக்கின்றனர். அந்த வரிசையில் அமெரிக்க அதிபர் டிரம்பின் வெள்ளை மாளிகை அலுவலகத்துக்கான இயக்குனர் செர்ஜியோ கோரும் சேர்ந்து இருக்கிறார். இந்தியாவுக்கான அமெரிக்காவின் புதிய தூதராக இவரை தான் டிரம்ப் நியமித்து இருக்கிறார். அமெரிக்க செனட் சபையில் பேசிய செர்ஜியோ, சீனாவுடன் இந்தியா நெருக்கம் காட்டியதால் அமெரிக்காவுக்கு ஏற்பட்டு இருக்கும் பதற்றத்தை ஒப்புக்கொண்டார். அதே போல் ரஷ்யாவிடம் நாம் ஆயில் வாங்குவதற்காக டிரம்ப் போட்ட அடாவடி வரி, உண்மையில் உக்ரைன் மீதான பாசத்தில் போட்டது அல்ல; அது அமெரிக்காவின் வர்த்தக யுக்தி என்பதையும் அவர் சொல்லாமல் சொல்லி விட்டார். செனட் சபையில் அப்படி அவர் என்ன பேசினார் என்பதை பார்க்கலாம்: இந்தியா, அமெரிக்கா இடையேயான வரி பிரச்னை விரைவில் முடிந்து விடும். சீக்கிரமே இரு நாடுகள் இடையேயான வர்த்தக பிரச்னைகளை தீர்க்க முடியும் என்று நினைக்கிறேன். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதில் நமக்கு கருத்து வேறுபாடு உண்டு. இருப்பினும், அமெரிக்கா-இந்தியா நட்பு முக்கியத்துவம் வாய்ந்தது. சீனாவை ஒப்பிடும் போது அமெரிக்காவுடன் இந்தியாவுக்கு நல்ல நட்பு இருக்கிறது. ஓபனாக சொல்ல வேண்டும் என்றால், சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பதால் இந்தியாவும் கவலை கொண்டு இருக்கிறது. நல்ல நட்பு நாடு என்ற முறையில் இந்தியாவுடன் பக்கபலமாக அமெரிக்கா நிற்கும். அதே போல் சீனாவிடம் இருந்து இந்தியாவை விலக்கி நம் பக்கம் இழுத்து கொண்டு வருவது தான் முதல் வேலையாக இருக்கும். ஏனென்றால் அமெரிக்காவும் இந்தியாவும் பல பொதுவான விஷயங்களை கொண்டு இருக்கின்றன. இந்தியா விவகாரத்தில் டிரம்பும் ஆர்வமாக இருக்கிறார் என்று செர்ஜியோ பேசினார். அடுத்து, ரஷ்யாவிடம் ஆயில் வாங்குவதற்காக நமக்கு டிரம்ப் போட்ட வரிக்கு பின்னால் இருக்கும் உண்மையையும் உடைத்தார். அவர் கூறியது: இந்தியாவுடன் நடந்து வரும் வர்த்தக பேச்சு வார்த்தையில் அமெரிக்கா நினைக்கும் முக்கிய விஷயம் நம் எரிபொருட்களுக்கு இந்தியா தனது சந்தையை திறக்க வேண்டும் என்பது தான். நம் கச்சா எண்ணெய், பெட்ரோலிய பொருட்கள், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஆகியவற்றுக்காக இந்திய சந்தை திறக்கப்பட வேண்டும். இந்தியாவில் இருக்கும் நடுத்தர மக்கள் தான் நம் இலக்கு. அவர்கள் அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையை விட அதிகம். அமெரிக்காவுக்கு இந்த வர்த்தகம் பெரிய பொருளாதார வாய்ப்பு என்று செர்ஜியோ சொன்னார். அதாவது, அமெரிக்காவிடம் நாம் அதிகளவில் கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களை வாங்க வேண்டுமாம். உக்ரைன் போரை நிறுத்த வேண்டும் என்பதை விட, அந்த போரை வைத்து அமெரிக்கா எப்படியாவது கல்லா கட்ட வேண்டும் என்று டிரம்ப் துடிக்கிறார் என நிபுணர்கள் சாடுவது இதற்கு தான். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் கொந்தளித்த டிரம்ப், இந்தியாவின் பொருளாதாரத்தை செத்த பொருளாதாரம் என்றார். ஆனால் அந்த செத்த பொருளாதாரத்துடன் தான் எப்படியாவது வர்த்தக உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா துடிக்கிறது. இது எவ்வளவு பெரிய முரண். உக்ரைன், ரஷ்யா போரை மோடியின் போர் என்று டிரம்ப் சகாக்கள் சாடினர். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் பரிமாறப்படும் பணத்தை ரத்தப்பணம் என்றனர். இதெல்லாம் உக்ரைன் மீதான பாசத்தில் இல்லை. மாறாக பெரிய நாடகம். அடிப்படையில் டிரம்ப் ஒரு வியாபாரி. அவருக்கு எல்லாமே வர்த்தகம் வர்த்தகம் தான். அவர் பேசும் டீல் எல்லாம் வர்த்தகத்தை மையப்படுத்தியே இருக்கிறது. பைடன் காலத்தில் உக்ரைனுக்கு அமெரிக்கா எவ்வளவோ உதவிகளை செய்தது. ஆனால் டிரம்ப் வந்த பிறகு அதை எல்லாம் திரும்ப கேட்டார். நாங்கள் எத்தனை லட்சம் கோடி ரூபாய்க்கு உதவி செய்தோமோ, அத்தனை லட்சம் கோடிக்கும் உங்களிடம் இருக்கும் அரிய கனிமங்களை அள்ளிக்கொள்கிறோம் என்றார். அப்படிப்பட்டவர் 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவை வைத்து எவ்வளவு பெரிய வர்த்தக கனவு கண்டு இருப்பார். ஆனால் அவரது மிரட்டல் உருட்டல் இந்தியாவிடம் வேலை செய்யவில்லை. அமெரிக்காவுக்கு எந்த வகையிலும் இந்தியா அடிபணியவில்லை. அதுதான் இப்போது அமெரிக்காவை இறங்கி வர வைத்திருக்கிறது என்கின்றனர் சர்வதேச நிபுணர்கள். #IndiaVsUSTradeWar #IndiaVsUSTaxIssue #SergioGorOnIndia #UkraineVsRussia #TradeWar #TaxIssues #IndiaUSRelations #InternationalTrade #GlobalEconomy #SergioGor #RussiaUkraineConflict #EconomicPolicies #CrossBorderTrade #PoliticalEconomy #StrongerTogether #BusinessImpact #MarketTrends #GeopoliticalAnalysis #GlobalTradeRelations #EconomicsDiscussion

செப் 12, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

cpv s
அக் 28, 2025 14:33

if america is giving oil at low rate we will buy thats is nature, who ever sale at low price we will buy.


ramesh v
செப் 15, 2025 15:49

சூப்பர் bro


Rajpal
செப் 14, 2025 21:28

ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரித்ததால், சவுதி அரேபியாவிலிருந்து இறக்குமதி சில சமயங்களில் குறைகிறது. எனவே அமெரிக்காவின் வரி விதிப்புக்கு அமெரிக்காவின் நண்பன் சவூதி அரேபியாவின் அழுத்தமும் காரணமாக இருக்கலாம்.


S.jayaram
செப் 13, 2025 20:51

நான் முன்பு கூறியது இப்போது நடந்து வருகிறது அமெரிக்கா நம்மிடம் அடி வாங்கி தான் அடங்குவான் என்றேன் ஒரு வருடத்திற்கு முன்னரே,


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை