எல்லையில் ரோந்துப் பணி எட்டியது உடன்பாடு | India-China disengagement at LAC |
சீனாவுடன் நமக்கு எல்லை குறித்த பிரச்னை நீண்ட காலமாக உள்ளது. இதனால் எல்லைகள் இதுவரை துல்லியமாக வரையறை செய்யப்படவில்லை. எல்.ஏ.சி எனப்படும் எல்லை கட்டுப்பாடு கோடு நிர்ணயிக்கப்பட்டு இரு ராணுவமும் அவரவர் பகுதியில் ரோந்து செல்கின்றன. இந்த சூழலில் கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ரோந்து படை மீது சீன ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது. 2020ல் நடந்த இந்த சம்பவத்தில் 20 இந்திய ஜவான்கள் இறந்தனர். அதை காட்டிலும் இரு மடங்கு சீன வீரர்களும் பலியாகினர். இரு தரப்பு உறவில் 45 ஆண்டுகள் இல்லாத வகையில் விரிசல் ஏற்பட்டது. அரசியல், சமூக, பொருளாதார உறவிலும் பெரும் தாக்கம் உண்டானது. இதை தொடர்ந்து இரு தரப்பு ராணுவ அதிகாரிகளும், பல்வேறு இடங்களில் சுமூக பேச்சுவார்த்தைகள் நடத்தினர். மோதலுக்கு முன் இரு நாட்டு ராணுவமும் எதுவரையில் ரோந்து சென்றனவோ, அதே நிலைக்கு திரும்ப வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக நின்றது. அதே நேரம் சீனாவோ நம் பகுதிக்குள் ஊடுருவிய நிலப்பகுதிகளில் இருந்து பின்வாங்க முடியாது என பிடிவாதமாக இருந்தது. அந்த இடங்களில் தாறுமாறாக கட்டுமானங்களையும் மேற்கொண்டது. இந்தியாவும் பதிலுக்கு எல்ஏசியை ஒட்டிய இடங்களில் சாலை அமைப்பது, தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்துவது என சுறுசுறுப்பு காட்டியது. இதை எதிர்பார்க்காத சீனா மெல்ல மெல்ல இறங்கி வந்தது. பல கட்ட பேச்சுக்கு பின், ஐந்து இடங்களில் சமரசம் ஏற்பட்டு படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன. டெப்சாங்க், டெம்சோக் இடங்கள் தொடர்பாக மட்டும் பிரச்னை நீடித்தது. இந்த சூழலில் 2020 ஜூன் மாதத்துக்கு முன் இருந்த அளவில் இரு தரப்பும் ரோந்து செல்லலாம் என உடன்பாடு ஏற்பட்டு உள்ளதாக வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார். இடைவிடாத முயற்சியால் இது சாத்தியமாயிற்று என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் திருப்தி தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், இந்தியாவுடன் பொருளாதார உறவு பலப்பட வேண்டும் என சீனா விரும்பியது. அதன் சர்வதேச அரசியல் ஆதிக்க முயற்சிகளுக்கு தடை போடும் அமெரிக்காவின் முயற்சிகளுக்கு இந்தியா துணை போகக்கூடாது என்றும் நினைத்தது. ஆனால், எல்லையில் அமைதியை சீர்குலைத்து விட்டு மற்ற இடங்களில் உறவை எப்படி வலுவாக்க முடியும் என நாம் கேட்டுக் கொண்டே இருந்தோம் என வெற்றி ரகசியத்தை ஜெய்சங்கர் திரைநீக்கி காட்டி உள்ளார்.