இண்டி கூட்டணியிலேயே வெடித்தது மோதல் | Mamata Banerjee | Congress | Trinamool Congress
காங்கிரஸ் அங்கம் வகிக்கும் இண்டி கூட்டணியில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் இருக்கிறது. இருந்தாலும் மேற்குவங்க மாநிலத்தை பொறுத்தவரையில் இரு கட்சிகளுக்கும் ஏழாம் பொருத்தம் தான். அங்கே திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கும் நாளுக்கு நாள் மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. இதனால் நடந்து முடிந்த இடை தேர்தலில் மட்டுமல்லாது, லோக் சபா தேர்தலிலும் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் தனித்தே போட்டியிட்டன. இடைத்தேர்தல் நடந்த 6 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதேபோல லோக் சபா தேர்தலில் 40 தொகுதிகளில் 29 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்போது மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலிலும் காங்கிரஸ் துடைத்தெறியப்பட்டுள்ளது. இந்த சூழலில் அதானி விவகாரத்தை முன்வைத்து இண்டி கூட்டணி கட்சியினர் பார்லிமென்ட்டை தொடர்ந்து முடக்கி வருகின்றனர். இது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இனியும் பார்லிமென்ட்டில் காங்கிரசுக்காக ரப்பர் ஸ்டாம்ப் போல இருக்க முடியாது. காங்கிரஸைப் போல இல்லாமல் ஊழல் குறித்து இரு அவைகளிலும் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. ஊழலை பற்றி விவாதிக்க காங்கிரசுக்கு விருப்பமில்லை. அதனால் இரு அவைகளும் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகிறது. இரு அவைகளும் நடந்தால் தான் மேற்கு வங்க மக்களுக்கான கோரிக்கைகளை முன்வைக்க முடியும். காங்கிரசுடன் தேர்தல் கூட்டணி ஏதும் கிடையாது. இரு கட்சிகளும் இண்டி கூட்டணியில் அங்கம் வகிக்கின்றோம். காங்கிரஸ் கட்சியின் ஒருதலைபட்சமான முடிவுகளை நாங்கள் ஏற்க மாட்டோம் என திரிணாமுல் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் கூறியுள்ளனர்.