வெளிநாட்டு பத்திரிகைகள் மன்னிப்பு கேட்க வலியுறுத்தல் | Indian Pilot Federation | Air India Flight
குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து ஜூன் 12ல் லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், டேக் ஆப் ஆன சில வினாடிகளில் கட்டடம் மீது விழுந்து வெடித்தது. இந்த விபத்தில் 260 பேர் இறந்தனர். விமானம் விழுந்ததற்கான காரணம் பற்றி நிபுணர் குழு ஆராய்ந்து வருகிறது. விமானத்தின் கருப்பு பெட்டியில் பைலட்களின் உரையாடல் பதிவாகி இருந்தது. எரிபொருள் சுவிட்சை எதற்காக ஆப் செய்தீர்கள் என ஒரு பைலட் கேட்பதும், நான் எதுவும் செய்யவில்லை என மற்றொரு பைலட் பதில் சொல்வதும் பதிவாகி இருந்தது. இதன் மூலம், எரிபொருள் செல்வது தடைபட்டு இன்ஜின் நின்றதால் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என நம்பப்படுகிறது. இச்சூழலில், வால் ஸ்ட்ரீட், ராய்ட்டர்ஸ் போன்ற வெளிநாட்டு பத்திரிக்கைகளில், பைலட்களின் அலட்சியம் காரணமாக விபத்து நடந்ததாக செய்தியும், விமர்சன கட்டுரைகளும் வெளியாகின. இதற்கு இந்திய பைலட் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. விபத்து பற்றி தவறான தகவல்களை வெளியிடக் கூடாது என இரு நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்திய பைலட் கூட்டமைப்பினர் கூறும்போது, இந்திய விமானிகள் மீது பழிசுமத்தும் வகையில், வால் ஸ்ட்ரீட், ராய்ட்டர்ஸ் பத்திரிக்கைகள் செய்திக் கட்டுரை வெளியிட்டுள்ளன. இதன் மூலம், நம் பைலட்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இறந்து போன இரு பைலட்களை அவமதிக்கும் வகையிலும், அவர்களின் குடும்பத்தாருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையிலும் இது உள்ளது. அவர்கள் வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கேட்க வேண்டும். ஏற்கனவே வெளியிட்ட செய்தி கட்டுரைக்கு விளக்கம் கேட்டு சட்டப்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.