இந்தியா - ரஷ்யா நட்பை வலுப்படுத்த நடவடிக்கை: புடினை சந்தித்த பின் மோடி அறிவிப்பு Modi Press Meet
அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் புடின், டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார். இருவரும் இரு நாட்டு உறவுகள், தொழில், வர்த்தகம், பாதுகாப்பு குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினர். இரு நாடுகள் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி விளக்கினார். செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியா வந்துள்ள ரஷ்ய அபதிர் புடின் மற்றும் ரஷ்ய பிரதிநிதிகளை வரவேற்கிறேன். இந்தியா - ரஷ்யா இடையிலான உறவு பன்னெடுங்காலமாக தொடர்ந்து வருகிறது. இன்றிலிருந்து சரியாக 25 ஆண்டுகளுக்கு முன், இந்தியா - ரஷ்யா இடையிலான உறவை பலப்படுத்தும் விதையை, அதிபர் புடின் விதைத்தார். புடின் தலைமையிலான ரஷ்ய அரசின் நடவடிக்கையால், இரு நாடுகள் இடையிலான உறவு தொடர்ந்து மேம்பட்டு வந்துள்ளது. தற்போது அது புதிய உச்சம் தொட்டுள்ளது. இரு நாடுகள் இடையிலான பிரிக்க முடியாத இந்த மகத்தான நட்புக்காக, ரஷ்ய அதிபர் புடினுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறேன். கடந்த காலங்களில் உலகம் பல்வேறு சங்கடங்களை சந்தித்துள்ளது. பல ஏற்றத்தாழ்வுகளை கண்டுள்ளது. எனினும், இந்தியா - ரஷ்யா இடையிலான நட்பு ஓர் துருவ நட்சத்திரம் போல் ஜொலிக்கிறது.