மாஜி இன்ஸ்பெக்டருக்கு சிறை: 2001ல் நடந்தது என்ன? | Inspector | Police Arrest
திண்டுக்கல் செம்பட்டி சேடப்பட்டியில் வீடு ஒன்றில் கடந்த 2001ம் ஆண்டில் நகை திருடு போனது. இது தொடர்பாக அவர்கள் செம்பட்டி போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தனர். அப்போது இன்ஸ்பெக்டராக இருந்த ரங்கசாமி, கான்ஸ்டபிள் வீரத்தேவர், சின்ன தேவர் ஆகியோர் திருட்டு நடந்த வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணை கைது செய்தனர். 2001 பிப்ரவரி 20ம் தேதி அதிகாலை 2 மணிக்கு அத்துமீறி விசாரணைக்காக போலீஸ் ஸ்டேசன் அழைத்து சென்றனர். அங்கு போலீசார் மூவரும் பெண்ணின் உடைகளை அவிழ்த்து மானபங்கம் செய்து லத்தியால் தாக்கி விசாரணை செய்துள்ளனர். பின்னர் அழைக்கும் போதெல்லாம் விசாரணைக்கு வர வேண்டும் என மிரட்டி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதில் மனம் உடைந்த பெண் அவரது வீட்டின் அருகே இருந்த தோட்டத்து கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பலத்த காயங்களுடன் அவரை மீட்ட ஊர் மக்கள் திண்டுக்கல் அரசு ஆஸ்பிடலில் சேர்த்தனர். இதுகுறித்து திண்டுக்கல் ஆர்டிஓவிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. புகார் கொடுத்த பின்னர் பெண்ணின் கணவரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். புகாரின் அடிப்படையில் ஆர்டிஓ 40க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை செய்து திண்டுக்கல் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் முதன்மை அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் சண்முக பார்த்திபன் ஆஜராகி வாதாடினார். வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி தீபா தீர்ப்பு அறிவித்தார். சம்பவம் நடந்தபோது செம்பட்டி இன்ஸ்பெக்டராக இருந்த ரங்கசாமி, கான்ஸ்டபிளாக இருந்த வீர தேவர் மற்றும் சின்ன தேவர் ஆகியோருக்கு 10 வருடம் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டது. மூவரும் தலா ரூபாய் 36 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. குற்றவாளிகள் அனைவரும் இப்போது பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.