வாட்டர் சல்யூட் அடித்து வரவேற்பு! | Vizhinjam international seaport | Kerala | First mothership
விழிஞ்ஞம் துறைமுகம் வந்தது முதல் கன்டெய்னர் கப்பல்! கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்துள்ள விழிஞ்ஞத்தில், அதானி குழுமம் சார்பில் பிரமாண்ட துறைமுகம் அமைக்கப்பட்டு வருகிறது. பிரமாண்ட கப்பல்கள் நிறுத்தும் வசதியுடன் உள்ள இந்த துறைமுகம், சர்வதேச வர்த்தகத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. சர்வதேச அளவில், துறைமுக வர்த்தகத்தில் ஆறு அல்லது ஏழாவது இடத்துக்கு இந்தியா முன்னேறுவதற்கு இந்த துறைமுகம் முக்கிய பங்காற்றும். ஐரோப்பிய நாடான டென்மார்க்கைச் சேர்ந்த, மெர்ஸ்க் எனப்படும் உலகின் இரண்டாவது மிகப் பெரிய கப்பல் போக்குவரத்து நிறுவனத்தின், பிரமாண்ட சான் பெர்னாண்டோ சரக்கு கப்பல், அதானி துறைமுகத்துக்கு நேற்று வந்தது. இதில், 2,000 கன்டெய்னர்கள் இடம் பெற்றுள்ளன. முதல் முறையாக வந்துள்ள பிரமாண்ட கப்பல் என்பதால், அதற்கு வாட்டர் சல்யூட் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநிலத்தின் துறைமுக அமைச்சர் வி.என்.வாசவன் உள்ளிட்டோர் அதை வரவேற்றனர். அதிகாரப்பூர்வமான வரவேற்பு விழா இன்று நடக்க உள்ளது. பா.ஜ.வைச் சேர்ந்த மத்திய துறைமுக அமைச்சர் சர்பானந்த சோனவால், முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கின்றனர். மொத்தம் 8,867 கோடி ரூபாய் மதிப்பில் துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறி உள்ளார்.