ஷியா மசூதியை குண்டு வைத்து தகர்க்க ஐஎஸ்ஐஎஸ் துடிப்பது ஏன்? | ISIS attacks on Sayyida Zaynab mosque
சிரியாவில் 50 ஆண்டுகளாக நடந்த அப்பா ஆசாத், மகன் ஆசாத் ஆட்சி சில வாரங்கள் முன்பு முடிவுக்கு வந்தது. எச்டிஎஸ் என்னும் ஹயத் தஹ்ரீர் அல்ஷாம் கிளர்ச்சி படை சிரியாவின் தலைநகர் டமாஸ்கசை கைப்பற்றியது. இதன் மூலம் சிரியாவின் ஆட்சி கிளர்ச்சி படை வசம் போனது. இப்போது எச்டிஎஸ் தான் அதிகாரப்பூர்வ அரசாங்கத்தை நடத்தி வருகிறது. எச்டிஎஸ் அமைப்பு அல் குவைதாவில் இருந்து பிரிந்து வந்த அமைப்பாகும். எச்டிஎஸ் தலைவர்கள், அதில் அங்கம் வகிப்பவர்கள் சன்னி முஸ்லிம் பிரிவை சேர்ந்தவர்கள். சிரியாவை பொறுத்தவரை சன்னி முஸ்லிம்கள் தான் மெஜாரிட்டி. மொத்த முஸ்லிம்களில் 85 முதல் 90 சதவீதம் சன்னி முஸ்லிம்கள். 10 முதல் 15 சதவீதம் தான் ஷியா முஸ்லிம்கள். என்ன தான் சன்னி முஸ்லிம்கள் மெஜாரிட்டியாக இருந்தாலும், கடைசி 50 ஆண்டுகள் ஆட்சி செய்த ஆசாத் குடும்பத்தினர் ஷியா முஸ்லிம் பிரிவை சேர்ந்தவர்கள். சன்னி, ஷியா முஸ்லிம் பிரச்னையும் உள்நாட்டு போர் வெடிக்க முக்கிய காரணமாக இருந்தது. இறுதியில், 50 ஆண்டு நடந்த ஷியா முஸ்லிம் ஆட்சியை, பெரும்பான்மை பிரிவை சேர்ந்த சன்னி முஸ்லிம் கிளர்ச்சி படை முடிவுக்கு கொண்டு வந்து விட்டது. சிரியாவில் மட்டும் அல்ல; உலக அளவில் எடுத்துக்கொண்டாலும் ஷியாவை விட சன்னி முஸ்லிம்கள் தான் பல மடங்கு அதிகம். இப்போது, சிரியாவில் ஆட்சிக்கு வந்திருக்கும் சன்னி பிரிவை சேர்ந்த எச்டிஎஸ் கிளர்ச்சி அமைப்பு, தங்கள் ஆட்சி எல்லோருக்குமானதாக இருக்கும் என்று அறிவித்துள்ளது.