முடிவுக்கு வந்தது இஸ்ரேல் - ஹமாஸ் போர்: மத்தியஸ்தம் செய்த நாடுகளுக்கு டிரம்ப் பாராட்டு | Trump
இஸ்ரேல் ராணுவத்திற்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே காசாவில் இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்த சண்டையில், இதுவரை 70 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். காசாவில் ஆயுதங்களுடன் குவிந்த ஹமாஸ் படையினர், இஸ்ரேல் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்துவதும், பதிலுக்கு இஸ்ரேல் ராணுவம் ட்ரோன், ஏவுகணை தாக்குதல் நடத்துவதும் தொடர் கதையானதால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் நிலவியது. இந்த சண்டையை முடிவுக்கு கொண்டு வர, இந்தியா, ஐரோப்பிய யூனியன் நாடுகள், அமெரிக்கா, அரபு நாடுகள் என உலக நாடுகள் அனைத்தும் பெரு முயற்சி மேற்கொண்டன. எனினும், இரு தரப்பும் சண்டை நிறுத்தத்திற்கு ஒத்து வராததால், போர் 2 ஆண்டுகளாக நீடித்தது. நிபந்தனையின்றி இஸ்ரேல் பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவிக்க வேண்டும் என, இஸ்ரேல் வலியுறுத்தியது. தங்கள் மீதான தாக்குதலை நிறுத்தினால் தான் எவ்வித பேச்சுக்கும் முன்வர முடியும் என, ஹமாஸ் கூறியது. இந்த சண்டையை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 20 அம்சங்கள் அடங்கிய நிபந்தனையை இரு தரப்பினரும் ஏற்க வலியுறுத்தினார். இஸ்ரேல் அதை ஏற்பதாக கூறினாலும், அனைத்து நிபந்தனைகளையும் ஏற்க ஹமாஸ் மறுத்தது. தான் விதித்த நிபந்தனையை ஹமாஸ் ஏற்க மறுத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் மிரட்டும் தொணியில் டிரம்ப் கருத்து தெரிவித்தார். தொடர்ந்து கத்தார், எகிப்து, துருக்கி நாடுகளின் உதவியுடன் டிரம்ப்பின் அமைதி பேச்சுவார்த்தையை தொடர்ந்தார். சண்டை நிறுத்தத்திற்கு சம்மதிக்கும் படி இஸ்ரேல் - ஹமாஸ் இடையே அரசு நாடுகள் மத்தியஸ்தம் பேசின. இந்நிலையில், சண்டை நிறுத்தத்த ஒப்பந்தத்தில் இஸ்ரேல் - ஹமாஸ் தரப்பினர் கையெழுத்திட்டுள்ளதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து பதிவிட்டுள்ளார். இதை இஸ்ரேலும் உறுதிப்படுத்தி உள்ளது. இது குறித்து, அதிபர் டிரம்ப் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான சண்டையை முடிவுக்கு கொண்டு வரும் எங்கள் அமைதி திட்டத்தின் முதல் பகுதியாக இரு தரப்பினரும் கையெழுத்திட்டுள்ளனர் என்பதை மகிழ்வுடன் அறிவிக்கிறேன். பிணைக்கைதிகள் அனைவரும் விரைவில் விடுக்கப்படுவர். காசாவில் இருந்து இஸ்ரேல் ராணுவம் முழுவதும் திரும்பப் பெறப்படும். இதன் மூலம், உறுதியான, நிரந்தரமான அமைதிக்கு வழிவகுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல், அனைத்து அரபு நாடுகள், அதை சுற்றியுள்ள நாடுகள் மற்றும் அமெரிக்காவுக்கு இது ஒரு மிகப் பெரிய சிறப்பான நாள். வரலாற்று சிறப்பு மிக்க இந்த நடவடிக்கை சாத்தியமாக மத்தியஸ்தத்தில் ஈடுபட்ட கத்தார், எகிப்து மற்றும் துருக்கி நாடுகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அமைதியை நிலைநாட்டுவதில் முயற்சித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் என டிரம்ப் கருத்து பதிவிட்டுள்ளார். இதன் மூலம், இரண்டு ஆண்டுகளாக நீடித்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் சண்டை முடிவுக்கு வந்துள்ளது. இதன் மூலம் மத்திய கிழக்கில் அமைதிக்கு வழி பிறந்துள்ளதாக கத்தார் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.