இஸ்ரேல் தாக்குதலுக்கு இறையான 15 ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் | Israel attack continued | Hamas leaders a
கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக காசாவில் ஹமாஸ் தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் கடும் தாக்குதல் நடத்தியது. தாக்குதலை தொடங்கி ஓராண்டு நெருங்கிவிட்ட நிலையில், அங்கு ஹமாஸ் தலைவர்கள் கொல்லப்பட்டது தொடர்பான தகவலை இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 3 மாதங்களுக்கு முன்பு காசாவின் வடக்கு பகுதியில் ஹமாஸ் பயங்கரவாதிகள் பலத்த பாதுகாப்புடன் பதுங்கி இருந்த சுரங்கத்தை IAF போர் விமானங்கள் தாக்கி அழித்தன. இந்த தாக்குதலில் ஹமாஸ் அரசின் தலைவர் ரவ்ஹி முஷ்தஹா, ஹமாஸின் தொழிலாளர் குழுவில் பாதுகாப்பு இலாகாவை வகித்த சமே அல் சிராஜ், அதே அமைப்பின் பொது பாதுகாப்பு பிரிவின் தளபதி சமி அவுடே ஆகியோர் கொல்லப்பட்டனர். இந்த கட்டடம் தான் ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டு மையமாக செயல்பட்டு வந்தது. அதன் மூத்த தலைவர்கள் நீண்ட நாட்கள் பதுங்கி இருக்கவும் உதவியது. இஸ்ரேல் மீது கடந்த அக்டோபரில் நடந்த தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகள் ஒழிக்கப்படும் வரை இந்த பதிலடி தொடரும் எனவும் கூறியுள்ளது. காசாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 41,788ஆகவும், காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 96,794ஆகவும் அதிகரித்துள்ளது. இப்போது ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு அளிக்கும் லெபனானில் ஆதிக்கம் செலுத்தும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள், அவர்களை ஆதரிக்கும் ஈரான் நாடுகளை இஸ்ரேல் குறி வைத்துள்ளது. இஸ்ரேல் - ஈரான் தாக்குதல்களால் மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் முதியவர்களுக்கு உதவி செய்து வந்த அமெரிக்காவை சேர்ந்த கலீல் அஹமது ஜவாத் என்பவர் இஸ்ரேல் தாக்குதலில் இறந்துள்ளார். லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள நகராட்சி கட்டடம் மீது விமானப்படை மூலம் தாக்கியதில் 15 ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் இறந்ததாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.