உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஈரானின் 5 முக்கிய புள்ளிகளை இஸ்ரேல் முடித்த பகீர் israel vs iran | israel attacks iran nuclear sites

ஈரானின் 5 முக்கிய புள்ளிகளை இஸ்ரேல் முடித்த பகீர் israel vs iran | israel attacks iran nuclear sites

இஸ்ரேல், ஈரான் இடையே நேரடி போர் வெடித்து இருக்கிறது. ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது. இதற்காக ஈரானை அமெரிக்காவும், இஸ்ரேலும் எச்சரித்து வந்தன. ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க கூடாது. மீறி தயாரித்தால் தாக்குதல் நடத்துவோம் என்று இஸ்ரேல் சொன்னது. இது தொடர்பாக அமெரிக்காவுடன் ஈரான் ஒப்பந்தம் போட வேண்டும் என்று டிரம்ப் சொன்னார். அமெரிக்கா-ஈரான் நடத்திய பேச்சு வார்த்தை கிட்டத்தட்ட தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் தான் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை துவங்கியது. ஈரானின் முக்கியமான அணு ஆராய்ச்சி கூடங்கள், அன்டர் கிரவுன்ட் யுரேனியம் செறிவூட்டல் மையங்கள், ஏவுகணை ஏவுதளங்கள், ராணுவ தளங்களை குறி வைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின. ஈரானின் அணு உற்பத்தி மையங்கள், ராணுவ தளங்களில் நடந்த தாக்குதலில் மூன்று முக்கிய தளபதிகளையும் 2 முக்கிய அணு சக்தி விஞ்ஞானிகளையும் இஸ்ரேல் கொன்று விட்டது. குறிப்பாக, ஈரான் தலைநகர் டெஹ்ரான் அருகே நடந்த குண்டு வீச்சில், ஈரானின் அனைத்து வகை ராணுவ படைகளின் தலைமை தளபதியான முகமது ஹூசைன் பகேரி கொல்லப்பட்டார். ஈரானின் உச்ச தலைவர் என்றால் அது கமேனி தான். இவருக்கு அடுத்த உச்ச தலைவர் அந்தஸ்த்தில் இருந்தவர் தான் ஹூசைன் பகேரி. இவரை இப்போது இஸ்ரேல் கொன்று இருப்பது ஈரானுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது. அதே போல் வெளிநாட்டு யுத்தங்களில் பங்கேற்கும் ஈரானின் முக்கிய சண்டை படையான ஈரான் புரட்சிகர காவல் படையின் தலைமை தளபதி ஹூசைன் சலாமியை டெஹ்ரானில் வைத்து இஸ்ரேல் குண்டு வீசி கொன்று விட்டது. சலாமியை கொல்ல வேண்டும் என்பது இஸ்ரேலின் முக்கிய திட்டங்களில் ஒன்று. காரணம், இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் எல்லா தாக்குதல்களையும் முன்னின்று நடத்தியது சலாமி தான். காசா, லெபனான், ஏமன், சிரியா, ஈராக் என மத்திய கிழக்கில் சண்டை ஏற்படும் இடங்களில் எல்லாம் ஈரானின் புரட்சிகர காவல் படையின் பங்கு இருக்கும். 1979ம் ஆண்இ இந்த படையை ஈரான் உருவாக்கியது. வெளிநாடுகளுக்கு சென்று சண்டை செய்வது தான் இதன் முக்கிய வேலை. படிப்படியாக வலுப்பெற்ற இந்த படை, ஈரானின் பிரதான ராணுவத்தை போல் சக்தி வாய்ந்த அமைப்பாக உருவானது. ஹமாசுக்கு எதிராக இஸ்ரேல் போரில் குதித்ததும், ஈரானில் இருந்து இஸ்ரேல் மீது 2 முறை நேரடி தாக்குதல் நடத்தப்பட்டது. ட்ரோன்கள், பாலிஸ்டிக் ஏவுகணைகள், க்ரூஸ் ரக ஏவுகணைகளை வைத்து இஸ்ரேலை ஈரான் தாக்கியது. 90 சதவீத தாக்குதலை இஸ்ரேல் முறியடித்து விட்டது. இருப்பினும் இஸ்ரேலின் 2 விமானப்படை தளங்களில் லேசான சேதம் ஏற்பட்டது. இந்த தாக்குதல்களை நடத்தியது ஈரானின் புரட்சிகர காவல் படை தான். அதற்கு தலைமை தாங்கியது தளபதி சலாமி. எனவே தான் இஸ்ரேலின் முக்கிய ஹிட் லிஸ்ட்டில் சலாமி இருந்தார். சலாமிக்கு 65 வயது. 1980களில் ஈரான்-ஈராக் போர் வெடித்த போது, ராணுவத்தில் சேர்ந்தார். பின்னர் ஈரானின் விமானப்படைக்கு தலைமை தாங்கும் பொறுப்பு வந்தது. பின்னர் புரட்சிகர காவல் படையின் துணை தளபதியாக சலாமி செயல்பட்டார். 5 ஆண்டுக்கு முன்பு புரட்சிகர காவல் படையின் தளபதி சுலைமானியை டிரம்ப் உத்தரவின் பேரில் அமெரிக்க ராணுவம் குண்டு வீசி கொன்றது. அதன் பிறகு புரட்சிகர காவல் படையின் தலைமை தளபதியாக சலாமியை ஈரானின் உச்ச தலைவர் கமேனி நியமித்தார். இப்போது சலாமியை கொன்றதை முக்கிய வெற்றியாக இஸ்ரேல் பார்க்கிறது. அதே போல், Khatam-al Anbiya மத்திய ராணுவ தலைமையகத்தின் தலைவர் கோலம் அலி ரஷித்தும் இஸ்ரேல் குண்டு வீச்சில் கொல்லப்பட்டு இருக்கிறார். இவர்கள் தவிர ஈரானின் முக்கிய அணு விஞ்ஞானிகள் Fereydoun Abbasi, Mohammad Mehdi Tehranchi ஆகியோரும் இஸ்ரேலின் குண்டு வீச்சில் கொல்லப்பட்டுள்ளனர். Fereydoun Abbasi ஈரான் அணு சக்தி அமைப்பின் தலைவராக பதவி வகித்தவர். Mohammad Mehdi Tehranchi, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இஸ்லாமிக் ஆசாத் பல்கலைகழகத்தின் தலைவராக இருந்தார். இஸ்ரேல் குண்டு வீச்சில் பிரதான தளபதிகள், முக்கிய விஞ்ஞானிகளை ஈரான் இழந்த இருப்பது, அந்த நாட்டுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ஜூன் 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை