ஐந்து அம்ச கொள்கைகளுக்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்! Israel Hamas War | Netanyahu
2023ம் ஆண்டு ஹமாஸ் பயங்கரவாதிகள், இஸ்ரேல் நாட்டின் நகரங்களைத் தாக்கி சுமார் 1,200 பேரை கொன்று 251 பேரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதைத் தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. பல கட்டங்களாக போர் தொடர்ந்து வரும் நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இதனால் ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்கவும், அவர்கள் பிடியில் உள்ள பிணைக்கைதிகளை மீட்கவும் இஸ்ரேல் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. பல கட்டங்களாக பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்ட நிலையில், தற்போது 50 பேர் வரை மட்டுமே ஹமாஸ் பிடியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பிணைக்கைதிகள் வைக்கப்பட்டிருக்கும் இடங்கள் உட்பட காசாவை முழுமையாக கைப்பற்றும் முடிவுக்கு வந்தார். இதற்கு இஸ்ரேல் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் பிணைக்கைதிகள், படைவீரர்கள் உயிருக்கு ஆபத்து என்று எச்சரித்தார். ஆனால் அதையும் மீறி ராணுவ அமைச்சரவையை கூட்டிய நெதன்யாகு, அந்த திட்டத்துக்கு ஒப்புதல் பெற்றுள்ளார். போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அவரின், ஐந்து கொள்கைகளுக்கு பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அனைத்து பிணைக்கைதிகளையும் திரும்பப் பெறுதல், ஹமாஸை நிராயுதபாணி ஆக்குதல், காசாவை கட்டுப்படுத்துதல், மாற்று சிவில் அரசை உருவாக்குதல் என கொள்கைகளை நெதன்யாகு வகுத்துள்ளார்.