உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இஸ்ரேலை அடிக்க ஈரான் அனுப்பிய ராட்சத ஆயுதங்கள் | israel vs iran | israel attacks iran nuclear sites

இஸ்ரேலை அடிக்க ஈரான் அனுப்பிய ராட்சத ஆயுதங்கள் | israel vs iran | israel attacks iran nuclear sites

ஈரானிடம் இப்போது அணு ஆயுதம் கிடையாது. ஆனால் அதை தயாரிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அணு ஆயுதம் தயாரிக்க வேண்டும் என்றால் உயர் தர அளவில் செறிவூட்டப்பட்ட யுரேனியம் தேவை. இந்த யுரேனியத்தை செறிவூட்டும் வேலையை ஈரான் தீவிரமாக செய்து வந்தது. கிட்டத்தட்ட அணு ஆயுதம் தயாரிக்க தேவையான அளவு யுரேனியத்தை செறிவூட்டியதாக பல உளவு அமைப்புகள் தெரிவித்தன. சர்வதேச அணு சக்தி முகமையும் இது பற்றி தொடர்ச்சியாக எச்சரித்து வந்தது. ஈரானிடம் அணு ஆயுதம் இருப்பது நல்லதல்ல. அந்த நாடு அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வந்தது. அணு ஆயுதம் தயாரிப்பதை நிறுத்தாவிட்டால், அது தொடர்பான ஆய்வு மையங்களை குண்டு வீசி தகர்ப்போம் என்று இஸ்ரேலும் எச்சரித்தது. டிரம்ப் அதிபர் ஆன பிறகு ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தீவிரமாக செயல்பட்டது. அணு ஆயுதம் தயாரிக்க மாட்டோம் என்று அமெரிக்காவுடன் ஈரான் ஒப்பந்தம் போட வேண்டும். இல்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று டிரம்ப் எச்சரித்தார். குறிப்பாக இஸ்ரேலை வைத்து மிரட்டினார். ஈரான் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், எந்த நேரமும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராக இருக்கிறது என்று சொல்லி வந்தார். ஒரு வழியாக ஈரான் பேச்சு வார்த்தைக்கு வந்தது. ஆனால் அமெரிக்கா போட்ட கண்டிஷனுக்கு அந்த நாடு உடன்படவில்லை. கிட்டத்தட்ட பேச்சு வார்த்தை தோல்வி அடைந்து போனது. இதனால் எந்த நேரமும் ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் சேர்ந்து தாக்குதல் நடத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. திடீரென 2 நாள் முன்பு ஈரான் மற்றும் மத்திய கிழக்கில் இருக்கும் அமெரிக்கர்களை உடனடியாக கிளம்பி வரும்படி அமெரிக்கா உத்தரவிட்டது. எதிர்பார்த்தது போலவே இன்று இஸ்ரேல் தனது ஆட்டத்தை ஆரம்பித்தது. போர் விமானங்கள், உளவு விமானங்கள், நடுவானில் எரிபொருள் நிரப்பும் விமானங்கள் என 100க்கும் அதிகமான விமானங்களை ஈரானை நோக்கி அனுப்பியது. 2,000 முதல் 3000 கிலோ மீட்டர் பறந்து சென்ற போர் விமானங்கள் ஈரானில் குண்டு மழை பொழிந்தன. ஈரானின் பிரதான அணு உற்பத்தி மையங்கள், அன்டர் கிரவுன்ட் யுரேனியம் செறிவூட்டும் மையம், ஏவுகணை ஏவுதளங்கள், ராணுவ தளங்களை குறி வைத்து இஸ்ரேல் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. ஈரான் முழுவதும் குண்டு சத்தம் முழங்கியது. அணு சக்தி மற்றும் ராணுவ கட்டமைப்புகளை இஸ்ரேல் நொறுக்கியது. 1980களில் நடந்த ஈரான், ஈராக் போரில் எவ்வளவு பெரிய சேதத்தை ஈரான் எதிர்கொண்டதோ, அதை விட அதிகமான சேதத்தை ஈரானுக்கு இஸ்ரேல் கொடுத்து விட்டது. தாக்குதல் நடத்திய மறுகணமே ஈரான் பதிலடி கொடுக்க கூடும் என்று இஸ்ரேல் உளவு அமைப்புகள் எச்சரித்தன. உடனே இஸ்ரேல் முழுதும் அவசர நிலையை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பிறப்பித்தார். மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். பதுங்கு குழிகளில் தஞ்சம் அடையும் படி அறிவுறுத்தப்பட்டது. அனைத்து மருத்துவமனைகளையும் அன்டர் கிரவுன்டுக்கு மாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. மிகவும் அத்தியாவசிய தேவை என்றால் மட்டும் மருத்துவமனைக்கு போக வேண்டும் என்று இஸ்ரேல் அரசு மக்களை கேட்டுக்கொண்டது. இஸ்ரேல் எல்லையை சுற்றிலும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். ஈரான் வான்வழி தாக்குதல் தான் நடத்தும். குறிப்பாக, ஏவுகணை, ட்ரோன்களை வைத்து தாக்க கூடும் என்பதை இஸ்ரேல் கணித்தது. அயன்டோம், டேவிஸ் ஸ்லிங், ஆரோ மற்றும் அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய ஏவுகணை தடுப்பு சிஸ்டங்களை உடனடியாக ஆக்டிவேட் செய்தது. கூடவே எல்லையை சுற்றிலும் தனது போர் விமானங்களை நிறுத்தியது. இஸ்ரேல் எதிர்பார்த்தது போலவே உடனடியாக ஈரான் பதிலடியை ஆரம்பித்தது. முதல் கட்டமாக 100 ராட்சத ட்ரோன்களை ஏவி விட்டது. எல்லையை நெருங்கும் முன்பே அவற்றை இஸ்ரேல் போர் விமானங்கள் வேட்டையாட ஆரம்பித்தன. இஸ்ரேல் எல்லைக்குள் நுழையும் முன்பே ஒவ்வொரு ட்ரோன்களையும் சுட்டு வீழ்த்தின. தொடர்ந்து ஈரானில் இருந்து கொத்து கொத்தாக ட்ரோன்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. அடுத்த சில மணி நேரங்களில் அவை இஸ்ரேலை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ட்ரோன் அட்டாக்கை இஸ்ரேல் முறியடித்தால் அடுத்த கட்டமாக மிகப்பெரிய அளவில் ஏவுகணை தாக்குதலை ஈரான் நடத்த வாய்ப்புள்ளது. ஈரானை பொறுத்தவரை ட்ரோன், ஏவுகணைகளை அன்டர் கிரவுன்டில் குவித்து வைத்திருக்கிறது. எனவே பாரபட்சம் இன்றி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும். ஈரானின் உச்ச தலைவரான அயத்துல்லா கமேனியும் இதை தான் சொல்லி இருக்கிறார். இஸ்ரேலுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த அவர், ‛ஈரான் மீது தாக்குதல் நடத்தியதற்கு மிகப்பெரிய பதிலடியை கொடுப்போம். முன்பு எப்போதும் இல்லாத வகையில் கடும் விளைவுகளை இந்த முறை இஸ்ரேல் எதிர்கொள்ளும் என்று அவர் எச்சரித்தார். காரணம், ஈரானின் கனவு திட்டத்தில் இஸ்ரேல் கைவைத்து விட்டது. மிகப்பெரிய சேதத்தையும் ஏற்படுத்தி விட்டது. அதோடு ஈரானின் ராணுவ தளங்களில் நடத்திய தாக்குதலில் கொத்து கொத்தாக வீரர்களையும் இஸ்ரேல் கொன்று குவித்து இருக்கிறது. இது பற்றி முழு விவரமும் வெளியாகவில்லை. இருப்பினும் பல முக்கிய ராணுவ தலைவர்கள் கொல்லப்பட்டு இருப்பது உறுதியாகி இருக்கிறது. எனவே இந்த முறை இஸ்ரேலுக்கு மிகப்பெரிய பதிலடியை ஈரான் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதே நேரம் இஸ்ரேலும் பின்வாங்காது. அதன் வலுவான வான் பாதுகாப்பு கவசங்கள் ஈரானின் தாக்குதலை முறியடிக்க கூடும். ஆபரேஷன் ரைசிங் லைன் என்ற பெயரில் இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியது. ஆபரேஷன் இன்னும் முடியவில்லை. தொடர்ந்து ஈரானை தாக்குவோம். இஸ்ரேல் மக்களையும் உலக மக்களையும் பாதுகாக்க இந்த நடவடிக்கை தொடரும். இந்த முறை எதற்கும் இஸ்ரேல் தயாராக இறங்கி இருக்கிறது. ஈரான் அணு சக்தி மையங்கள், ராணுவ தளங்கள் மீது தொடர் தாக்குதல் நடக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். இஸ்ரேலின் திடீர் தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா தான் இருக்கும் என்று சர்வதேச நிபுணர்கள் கூறுகின்றனர். ஈரானும் அதே குற்றச்சாட்டை வைக்கிறது. ஆனால் இந்த முறை அமெரிக்கா ஒதுங்கிக்கொண்டது. இஸ்ரேல் தாக்குதலுக்கும் அமெரிக்காவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இது இஸ்ரேல் சொந்தமாக எடுத்த முடிவு. எங்கள் மக்களை காக்க இந்த தாக்குதல் அவசியம் என்று கருதுவதாக இஸ்ரேல் எங்களிடம் சொன்னது. மற்றபடி இதற்கும் அமெரிக்காவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அமெரிக்காவின் ராணுவ முகாம்களை ஈரான் குறி வைக்க கூடாது என்று அமெரிக்கா சொல்லி இருக்கிறது. ஈரான், இஸ்ரேல் இரண்டுமே சக்தி வாய்ந்த நாடுகள். இரு நாடுகளும் முழு அளவிலான போரில் இறங்கினால், மத்திய கிழக்கின் நிம்மதி அடியோடு பறிபோகும் என்பது தான் நிதர்சனம்.

ஜூன் 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை