காலை முதல் நடக்கும் ரெய்டால் சென்னையில் பரபரப்பு | Jaffer sadiq case | ED raid | Chennai | Raid
ஜாபர் சாதிக் பினாமி கணக்கில் டிரான்ஸ்பரான கோடிகள்! களமிறங்கிய ED அதிகாரிகள் வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை இந்தியாவுக்கு கடத்தியதாக திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கை, மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் மார்ச் மாதம் கைது செய்தனர். அவர் டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். போதை பொருட்களை விற்பனை செய்ததன் மூலம் சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக ஜாபர் சாதிக் மீது வழக்கு பதிந்த அமலாக்க அதிகாரிகள், ஜூன் 26-ல் அவரை கைது செய்தனர். அமலாக்கத்துறை வழக்கில் ஜாபர் சாதிக்கை ஆஜர்படுத்த சிறை மாற்று வாரண்ட் பிறப்பித்து சென்னை செஷன்ஸ் கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி டில்லி திகார் சிறையில் இருந்து சென்னை அழைத்து வரப்பட்ட ஜாபர் சாதிக், நீதிபதி எஸ்.அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணைக்கு பின் போலீசார் அவரை புழல் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் அவரது பினாமியான ஜோசப் என்பவருக்கு சொந்தமான ஆவடி காமராஜ் நகரில் உள்ள வீட்டில் காலை முதல் அமலாக்க அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். ஜாபர் சாதிக்கிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் ஜோசப்பின் வங்கி கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த சோதனை நடப்பதாக தெரிகிறது. காரில் வந்த 3 அதிகாரிகள் சிஆர்பிஎப் போலீஸ் பாதுகாப்புடன் 6 மணி நேரத்துக்கும் மேலாக தொடர் ஜோசப் வீட்டில் சல்லடை போடுவதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.