21 ஆண்டுகளுக்கு பின் தமிழக அரசு வசமாகும் ஜெயலலிதா நகைகள் | Jayalalitha's jewells | Hand over to tn a
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு, 2004 முதல் கர்நாடக சிறப்பு கோர்ட்டில் நடந்தது. இதனால் 1996ல் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஜெயலலிதா வீட்டில் இருந்து பறிமுதல் செய்த நகைகள், நில பத்திரங்கள் கர்நாடக கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டன. இந்த வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு தண்டனை வழங்கப்பட்ட நிலையில் அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த விசாரணையின்போதே 2016ல் ஜெயலலிதா மரணம் அடைந்ததால், அவருக்கு எதிரான வழக்கை சுப்ரீம் கோர்ட் கைவிட்ட நிலையில், மற்ற குற்றவாளிகள் தண்டனை உறுதி செய்யப்பட்டது. கர்நாடக அரசின் கருவூலத்தில் உள்ள ஜெயலலிதா பயன்படுத்திய 27 கிலோ எடையுள்ள 468 வகை தங்க, வைர நகைகள், வெள்ளி பொருட்கள் உள்ளிட்ட உடைமைகளை ஏலத்தில் விட்டு, பணத்தை அரசின் கருவூலத்தில் சேர்க்கக்கோரி, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி எச்.வி.மோகன், ஜெயலலிதாவின் அனைத்து உடைமைகளையும் பிப்ரவரி 14, 15ல் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். 27 கிலோ தங்கம், வெள்ளி, வைர நகைகள், 1,562 ஏக்கர் நிலப் பத்திரங்களை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். நகைகளை எடுத்துச் செல்ல தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையினர் 6 பெட்டிகளுடன் வர வேண்டும். உரிய வாகன வசதி, பாதுகாப்புடன் வந்து அனைத்து நகைகளையும் எடுத்து செல்ல வேண்டும். பொருட்கள் எடுத்துச் செல்லும்போது அதனை மதிப்பீடு செய்ய மதிப்பீட்டாளர்கள் இருக்க வேண்டும். ஒட்டுமொத்த நடைமுறையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும்.