உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்தியா - அமெரிக்க வர்த்த ஒப்பந்தம் இறுதியானது: வான்ஸ்

இந்தியா - அமெரிக்க வர்த்த ஒப்பந்தம் இறுதியானது: வான்ஸ்

அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், குடும்பத்துடன் டில்லியில் சுவாமி நாராயண் கோயிலுக்கு சென்றார். பின் நேற்று மாலை பிரதமர் மோடியின் வீட்டிற்கு சென்ற வான்ஸ், அவருடன் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசித்தார். வான்ஸின் மனைவி உஷாவையும் வரவேற்ற மோடி, அவர்களின் குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்தார். இன்று காலை ஜெய்ப்பூருக்கு சென்ற வான்ஸ், மனைவி மற்றும் குழந்தைகளுடன் அங்குள்ள ஆம்பெர் கோட்டையை சுற்றிப் பார்த்தார். யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள அந்த கோட்டையை பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி என வான்ஸ் கூறினார். இந்நிலையில், மாலை ஜெய்ப்பூரில் நடந்த கூட்டத்தில், துணை அதிபர் வான்ஸ் பேசினார். அப்போது, இந்தியா - அமெரிக்கா உறவு குறித்து பல்வேறு முக்கிய அம்சங்களை தெளிவுபடுத்தினார். துணை அதிபர் வான்ஸ் பேசியதாவது: இந்தியாவில் எனக்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரமாண்டமான முறையில் நேர்த்தியாக கட்டப்பட்டுள்ள அக் ஷர்தாம் கோயிலை சுற்றிப் பார்த்ததில் மகிழ்ச்சி. அதை என் குழந்தைகளும் ரசித்து பார்த்தனர். பிரதமர் மோடியின் வீட்டில் கிடைத்த வரவேற்பு அலாதியானதாக இருந்தது. இன்று காலை ஜெய்ப்பூரில் வரலாற்று சிறப்பு மிக்க கோட்டையை சுற்றிப் பார்த்தேன். இது போன்ற புராதன சிறப்பு மிக்க இடங்களை பார்த்ததில் மகிழ்ச்சி. இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவை மேம்படுத்தவே இரு நாடுகளும் விரும்புகின்றன. இந்தியாவுடன் தொழில் முதலீடு, எரிசக்தி துறை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பேசினோம். அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுடனான உறவை வலுப்படுத்தவே விரும்புகிறார். இந்தியா - அமெரிக்காவின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை டிரம்ப் விரும்புகிறார். இந்தியர்களை குறைந்த கூலிக்கு வேலை செய்யும் தொழிலாளர்களாக ஒரு காலத்தில் பார்த்தனர். ஆனால், தற்போது அந்த நிலை மாறியுள்ளது. இந்தியாவுடனான தொழில், வர்த்தகத்தை உலக நாடுகள் விரும்புகின்றன. பிரதமர் மோடியின் செயல்பாடுகள் என்னை மிகவும் ஈர்த்துள்ளன. சொல்லப்போனால் அவரின் செயல்பாடுகளை கண்டு நான் பொறாமை பட்டுள்ளேன். வர்த்தக போர் துவக்கிவிட்டதாக அதிபர் டிரம்ப்பை சிலர் விமர்சிக்கின்றனர். ஆனால் உண்மை அதுவல்ல. நாங்கள் அனைவருடனான வளர்ச்சியை விரும்புகிறோம். இந்தியா அதன் இயற்கை வளம் மற்றும் வளமான கலாசாரத்துடன் வலிமையான பொருளாதாரத்தை அடைய விரும்புவதை நாங்கள் வரவேற்கிறோம். உலக அரங்கில் வெளிப்படையான, சுதந்திரமான, நேர்மையான பொருளாதார, வர்த்தக கொள்கையை ஆதரிக்கிறோம். டிரம்ப் - மோடி இருவரும் மிகச் சிறந்த தலைவர்கள். இருவரும் தொலை நோக்கு தன்மையுடன் செயல்படுகின்றனர். இந்தியாவுடனான வர்த்த ஒப்பந்தத்திற்கான விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டுவிட்டன. வேறெந்த நாடுகளை விடவும் இந்தியா - அமெரிக்கா இடையிலான ராணுவ உறவு பலமாக உள்ளது. இரு நாட்டு வீரர்களும் அதிக அளவில் சேர்ந்து பயிற்சியில் ஈடுபடுகின்றனர். இந்தியாவின் அணுசக்தி உற்பத்தியில் அமெரிக்காவின் ஆற்றல் மிகப் பெரிய பங்களிப்பை தரும். உலக அரங்கில் இந்தியா - அமெரிக்கா இணைந்து செயல்படுவதால், இரு நாடுகளும் மிகச் சிறந்த பலன்களை பெறலாம் எனவும் வான்ஸ் பேசினார்.

ஏப் 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை