கிறிஸ்தவ போதகர் ஜான் ஜெபராஜ் எங்கே? அதிர்ச்சி தகவல் | John Jebaraj pocso case | john jebaraj issue
பிரபல கிறிஸ்தவ மத போதகரான ஜான் ஜெபராஜ், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 37 வயதான ஜான் ஜெபராஜ் கோவை துடியலூர் பகுதியில் வசித்து வருகிறார். 11 மாதங்கள் முன்பு தனது வீட்டில் ஒரு விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அவருக்கு நெருக்கமான நிறைய பேர் பங்கேற்றனர். ஜான் ஜெபராஜின் நெருங்கிய உறவினர்களில் ஒருவர் 17 வயது சிறுமியை தத்தெடுத்து வளர்க்கிறார். அந்த சிறுமியும், அவளது 14 வயது தோழியும் ஜான் ஜெபராஜ் நடத்திய விருந்து நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். விருந்து முடிந்து எல்லோரும் சென்ற பிறகு, இரு சிறுமிகளுக்கும் ஜான் ஜெபராஜ் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது பற்றி வீட்டில் சொல்லக்கூடாது என்றும் மிரட்டி இருக்கிறார். ஜான் ஜெபராஜ்க் மிரட்டலுக்கு பயந்து போய் தங்களுக்கு நடந்த கொடுமை பற்றி 2 சிறுமிகளும் வாய் திறக்கவில்லை. ஒரு கட்டத்தில் 14 வயதான சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோரிடம் சொல்லி கதறி அழுதாள். இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே கோவை மத்திய பகுதி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். சிறுமியை விசாரித்த போது தான் 17 வயதான இன்னொரு சிறுமிக்கும் ஜான் ஜெபராஜ் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதனால் போக்சோ உட்பட 3 பிரிவுகளில் அவர் மீது மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விஷயத்தை முன்கூட்டியே அறிந்த ஜான் ஜெபராஜ் உடனடியாக தலைமறைவாகி விட்டார். அவரை இப்போது தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவர் வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல முயற்சிப்பதாக தகவல் வெளியானது. அதை தடுக்க ஏர்போர்ட்களுக்கு லுக் அவுட் நோட்டீசும் போலீசார் வழங்கி உள்ளனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்தபடி முன்ஜாமின் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் ஜான் ஜெபராஜ் மனு தாக்கல் செய்துள்ளார். ‛நான் வெளிநாடுகளுக்கு தப்பி செல்லமாட்டேன். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவேன் என்று மனுவில் உறுதி அளித்துள்ளார். இந்த முன்ஜாமின் முனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜான் ஜெபராஜின் சொந்த ஊர் தென்காசி. ஊழியம் நிமித்தமாக அவர் கோவையில் குடியேறினார். லேவி மினிஸ்ட்ரி என்ற பெயரில் ஊழியம் நடத்தி வந்தார். கிராஸ் கட் ரோட்டில் பிரார்த்தனை கூடமும் வைத்திருந்தார். மற்ற போதகர்களை போல் இல்லாமல், சினிமா பாணியில் ராப் இசை பாடல்களுடன் பிரார்த்தனை நடத்துவது ஜான் ஜெபராஜ் வழக்கம். போதனையின் நடுவே சினிமா பாணி வசனங்களையும், வடிவேல், விவேக், கவுண்டமணியின் சினமா வசனங்களையும் அள்ளி தெளிப்பார்.