வேலூரில் இருந்து சென்னை ஏர்போர்ட் செல்லும் வழியில் சம்பவம் | J.P.Nadda | National president | BJP |
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் அரசியல் தலைவர்களின் பார்வை தமிழகம் பக்கம் திரும்பி உள்ளது. பாஜக தலைவர்கள் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பலரும் அடுத்தடுத்து தமிழகத்திற்கு வண்ணம் உள்ளனா். அந்த வரிசையில் பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று தமிழகம் வந்தார். சென்னையில் நடந்த சைவ சித்தாந்த மாநாட்டில் பங்கேற்ற அவர், பாஜ மையக் குழு கூட்டத்தையும் தலைமையேற்று நடத்தினார். பின்னர் வேலூரில் உள்ள பொற்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு இரவு 7.30 மணி அளவில் மீண்டும் டெல்லி செல்ல சென்னை ஏர்போர்ட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை, குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம் அருகே சென்றபோது ஜே.பி.நட்டா இருந்த காரில் திடீரென சத்தம் வந்துள்ளது. இதனால் காரை பைபாசில் அப்படியே நிறுத்திய நிலையில், பாதுகாப்பிற்காக வந்த வாகனங்களும் அடுத்தடுத்து சாலையில் நிறுத்தப்பட்டது. பின்னால் வேகமாக வந்த இரண்டு கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி லேசான விபத்துக்குள்ளானது. பின்னர் ஜே.பி. நட்டா பாதுகாப்பிற்காக வந்த மாற்று வாகனத்தில் ஏறி சென்னை ஏர்போர்ட் சென்று டில்லி புறப்பட்டார். பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பயணம் செய்த கார் திடீரென பழுது ஏற்பட்டு நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.