தூங்கிய இளைஞரை தீர்த்து கட்டியது சம்பவம்; உறவினர்கள் ஆவேசம் | kanchipuram | drugs | crime
வாலிபர் தலையில் கல்லை போட்டு பப்ளிக் டாய்லெட் மீது பகீர் சம்பவம் கைதானவன் வீட்டை சூறையாடிய பெண்கள் காஞ்சிபுரம் மாநகராட்சி, சதாவரம் பகுதியை சேர்ந்தவர் 19 வயதான மாதவன். சதாவரம் பகுதியில் கஞ்சா, போதை மாத்திரை, ஊசிகள் அதிகளவில் புழக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. எப்போதும் நண்பர்களுடன் சுற்றித்திரிந்த மாதவனும், இதுபோன்ற போதைக்கு அடிமையானதாக தெரிகிறது. அவர் மீது 6 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இப்பகுதியில் உள்ள பொது கழிவறை கூரை மீதுதான் மாதவன் தூங்குவது வழக்கம். சனியன்று காலை, மாதவன் கீழே இறங்கி வராததால், பெற்றோர் கழிவறை மேலே சென்று பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். தூங்கி கொண்டு இருந்த மாதவன் மீது யாரோ பெரிய கல்லை போட்டதில், ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டு இருந்துள்ளார். உடனே காஞ்சிபுரம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின், மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனையில் சேர்த்து இருந்த நிலையில் நேற்று மாதவன் இறந்தார். விஷ்ணு காஞ்சிபுரம் போலீசார் விசாரித்தனர். இந்த கொலையில் தொடர்புடையதாக அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனை கைது செய்தனர். அவனுக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் இருக்கிறது. மாதவனுக்கும் சிறுவனுக்கும் ஏற்கனவே பிரச்னை இருந்துள்ளது. வெள்ளியன்று இரவு சிறுவனை மாதவன் அடித்ததாகவும், அந்த கோபத்தில் மாதவன் மீது கல்லை போட்டு சிறுவன் கொன்றதாகவும் போலீசார் தெரிவித்தனர். ஆத்திரத்தில் இருந்த மாதவனின் உறவினர்கள், கைதான 17 வயது சிறுவனின் வீட்டுக்குள் புகுந்து, டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை சூறையாடி ரோட்டில் வீசினர். சதாவரம் பகுதியில் கஞ்சா, போதை ஊசி புழக்கம் அதிகளவில் இருப்பதாக போலீசாருக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மாதவனின் உறவினர்கள் கூறினர். பொது கழிவறை கூரைக்கு செல்ல படிக்கட்டுகளோ, ஏணியோ இல்லை. கைதான அந்த சிறுவன் மட்டுமே சுமார் 25 கிலோ கல்லை கல்லை டாய்லெட் கூரைக்கு எப்படி தூக்கி சென்று மாதவனை கொன்று இருக்க முடியும் என்று உறவினர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். இதில் 5 பேர் சம்பந்தப்பட்டு இருப்பதாகவும், எஞ்சிய 4 பேரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். கொலை நடந்த இடத்தில் கிடந்த செருப்பை கைப்பற்றிய உறவினர்கள், அது மற்றொரு குற்றவாளி தவறவிட்டு சென்றது; அவனையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். போலீசார் கூறும்போது, மாதவன் கொலையில் ஒருவர் மட்டும் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு உள்ளதாக கூறினர். அந்த கல் ஏற்கனவே டாய்லெட் கூரை மீதுதான் இருந்ததாகவும்; தொடர்ந்து விசாரணை நடப்பதாகவும் தெரிவித்தனர்.