பேன்ட் பிடிக்காத ஆத்திரத்தில் தீர்த்து கட்டப்பட்ட டெய்லர் | Kanniyakumari | Nagercoil Tailor
நாகர்கோயில் திட்டுவிளை அண்ணா நகரை சேர்ந்தவர் செல்வம், வயது 65. அங்கு பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி ரோட்டில் டெய்லர் கடை நடத்தி வந்தார். வியாழனன்று மாலை அவரது கடையில் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்தார். தலை, காதில் கத்தரிக்கோலால் குத்தப்பட்ட அடையாளம் இருந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த பக்கத்து கடைகாரர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். செல்வம் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்தவரை பிடிக்க அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். தூத்துக்குடியை சேர்ந்த சந்திரமணி என்பவர் அங்கு வந்து சென்றது தெரியவந்தது. 100க்கும் மேற்பட்ட சிசிடிவிகளை ஆய்வு செய்து போலீசார் சந்திரமணியை தேடினர். கடைசியாக ஒரு விடுதி இருக்கும் பகுதியில் அவரது நடமாட்டம் பதிவாகி இருந்தது. அங்குதான் பதுங்கி இருப்பார் என்பதை உறுதி செய்த போலீசார் சுற்றி வளைத்தனர். சந்திரமணியை கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தனர். இவர் அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் சமையல் வேலை பார்த்து வந்துள்ளார். வழக்கமாக செல்வம் கடையில் தான் பேண்ட், ஷர்ட் தைக்க கொடுப்பாராம். சில நாட்களுக்கு முன் செல்வம் தைத்து கொடுத்த பேண்ட் சரியாக இல்லையாம். ஆல்டர் செய்ய கொடுத்தும் மீண்டும் அதே போலவே இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சந்திரமணி கடைக்கு சென்று தகராறு செய்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் உண்டாகி கை கலப்பாக மாறியது. கத்தரிக்கோலை எடுத்து செல்வத்தின் தலை, கழுத்தில் குத்தியுள்ளார் சந்திரமணி. கழுத்து, காதில் ஆழமாக காயம் உண்டானதால் அதிக ரத்தம் வெளியேறியது. மயங்கி சரிந்த டைலர் செல்வம் ஸ்பாட்டிலேயே துடிதுடித்து இறந்துள்ளார். தற்போது கொலை நடந்து 13 மணி நேரத்தில் குற்றவாளி பிடிபட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சந்திரமணியிடம் போலீஸ் விசாரணை நடக்கிறது.