தொடரும் அசம்பாவிதங்களால் காந்தாரா 2 வெளியாகுமா? Kantara | rishabshetty | kanadamovie
கன்னட மொழியில் 2022ல் வெளியான படம் காந்தாரா. கர்நாடகாவின் உடுப்பி மலை பகுதி மக்கள் வணங்கும் பஞ்சுருளி தெய்வத்தின் கதையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது. கன்னடம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதன் 2ம் பாகம் அக்டோபர் 2ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. காந்தாரா சாப்டர்-1 என்ற தலைப்பில் 2ம் பாகத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. நேற்று காலை கர்நாடகாவின் சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி அருகே உள்ள மாணி அணையில் படகில் வைத்து படப்பிடிப்பு நடந்தது. படகில் 30 பேர் வரை பயணித்த நிலையில், திடீரென படகு கவிழ்ந்தது. படத்தின் ஹீரோ ரிஷப் ஷெட்டி உள்பட அனைவரும் நீரில் தத்தளித்தனர். அவர்களில் சிலர் நீச்சல் அடித்து கரைக்கு வந்தனர். மற்றவர்களை மீட்பு படையினர் மீட்டனர். விபத்தால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதுடன் விலை மதிப்புள்ள கேமராக்கள் தண்ணீரில் மூழ்கின. படப்பிடிப்பு ஆரம்பித்த நாள் முதலே தொடர்ந்து அசம்பாவிதங்கள் நடந்தபடியே உள்ளன. படத்தின் மீதான எதிர்பார்ப்பை தாண்டி படப்பிடிப்பில் நடக்கும் விபத்தும் மரணமும் தான் பேசுபொருளாகி உள்ளது. காந்தாரா 2ம் பாகத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர் கபில், கடந்த மாதம் கேரளாவில், சவுபர்னிகா நதியில் மூழ்கி இறந்தார். இதே படத்தில் நடித்து வந்த நகைச்சுவை நடிகர் ராகேஷ் புஜாரி, கடந்த மாதம் நண்பரின் திருமண நிகழ்ச்சியில் நடனமாடும்போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். சில நாட்கள் முன்பு, படப்பிடிப்புக்காக வந்திருந்த திருச்சூரைச் சேர்ந்த விஜூ வி.கே விடுதியில் தங்கியிருந்த போது திடீர் மாரடைப்பா்ல் மரணம் அடைந்தார். உயிர் பலி மட்டமின்றி கடந்த ஆண்டு பிரம்மாண்ட செட் போட்டு படப்பிடிப்பு நடந்தபோது திடீரென சரிந்து விழுந்தது. நவம்பர் மாதம் கொல்லூரில் படப்பிடிப்பு நடத்த படகுழுவினர் ஒரு பஸ்சில் சென்று கொண்டு இருந்தபோது ஆற்றில் கவிழ்ந்தது. இத்தனை சம்பவங்களை கடந்து நேற்று நடந்த படகு விபத்தில் படத்தின் ஹீரோ ரிஷப் ஷெட்டி உயிர் தப்பியுள்ளார். இதனால் படக்குழு அதிர்ச்சியில் உள்ள நிலையில், படம் வெளியாகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.