பள்ளியில் இறங்கிய தவெக... HM-ஐ தூக்கியடித்த அரசு karur tvk video | karur thennilai govt school issue
பள்ளியில் தவெகவினர் செய்த காரியம் தலைமை ஆசிரியை 70 கிமீ தூக்கியடிப்பு வீடியோவால் பரபரப்பு கரூரில் நடந்தது என்ன? கரூர் மாவட்டம் தென்னிலையில் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. சில நாட்களுக்கு முன்பு இளைஞர்கள் சிலர் பள்ளிக்கு வந்தனர். தலைமை ஆசிரியை சுஜாதா சியாமளாவை சந்தித்து, பள்ளியை சுத்தம் செய்ய விரும்புவதாக கூறினர். அவரும் பள்ளியை சுத்தம் செய்ய அனுமதி அளித்தார். உடனே பொக்லைன் இயந்திரத்தை கொண்டு வந்து பள்ளியை சுத்தம் செய்யும் வேலையில் அந்த இளைஞர்கள் ஈடுபட்டனர். இதை எல்லாம் வீடியோவாக பதிவு செய்தனர். பின்னர் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் பள்ளி சுத்தம் செய்யப்பட்டதாக வீடியோ வெளியிட்டனர். குறிப்பாக, க.பரமத்தி வடக்கு ஒன்றிய தவெக பொறுப்பாளர் வினோத் என்பவர் தெறிக்கவிடும் பின்னணி இசையுடன் ரீல்ஸ் வெளியிட்டார். இந்த வீடியோ கரூர் முழுதும் தீயாய் பரவியது. சில ஆசிரிய அமைப்புகள் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்தன. சர்ச்சை எழுந்ததால் மாவட்ட முதன் கல்வி அதிகாரி செல்வமணி பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தார். என்ன நடந்தது என்பது பற்றி தலைமை ஆசிரியையிடம் விசாரித்தார். பின்னர் தலைமை ஆசிரியை சுஜாதாவை குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்து அதிரடி உத்தரவை பிறப்பித்தார். சுஜாதா இப்போது வேலை பார்த்து வந்த பள்ளியில் இருந்து குளித்தலை பள்ளிக்கூடம் 70 கிலோ மீட்டர் தூரத்துக்கும் அப்பால் இருப்பது குறிப்பிடத்தக்கது. அரசு பள்ளியில் இதுபோன்ற செயல்களில் அரசியல் கட்சிகள் ஈடுபட முறையான முன் அனுமதி வாங்க வேண்டும். ஆனால் அனுமதி பெறாமல் நடந்ததால் தலைமை ஆசிரியை இடமாற்றம் செய்யப்பட்டதாக கல்வி அலுவலக வட்டாரம் கூறியது. இது திமுகவின் சதி என்று கரூர் தவெகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.