கரூர் கூட்ட நெரிசல் வருத்தம் தெரிவித்த சீனா! | China | Vijay's Karur rally stampede | TVK | Vijay Ca
கரூரில் விஜய் பிரசார கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலின் தாக்கம் தமிழகம் மட்டுமின்றி தேசிய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஜனாதிபதி, பிரதமர், மத்திய அமைச்சர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தனர். நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கரூருக்கு வந்து நடந்த சம்பவத்தை கேட்டறிந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறி சென்றார். என்டிஏ கூட்டணி சார்பில் எம்பி ஹேமமாலினி தலைமையில் 8 எம்பிக்கள் அடங்கிய உண்மை கண்டறியும் குழு இன்று கரூரில் விசாரிக்கின்றனர். தமிழக அரசு அமைத்துள்ள ஒருநபர் ஆணையம் தமது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது. அதே நேரம் போலீஸ் தரப்பில் தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் கரூர் நகர பொறுப்பாளர் பவுன்ராஜ் கைதாகி உள்ளனர். வழக்கில் முன் ஜாமின் கோரி தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொது செயலாளர் நிர்மல்குமார் மனு செய்துள்ளனர். சிபிஐ விசாரணை வேண்டும் எனவும் தவெக தரப்பில் மனு செய்யப்பட்டுள்ளது. இந்த துயர சம்பவம் உலக நாடுகளில் பேசு பொருளாக மாறி அங்குள்ள தமிழர்கள் தங்கள் இரங்கல்களை பதிவு செய்தனர். இந்த சூழலில் சீனாவும் தமது இரங்கல் செய்தியை வெளியிட்டு உள்ளது. சீனா வெளியுறவு செய்தி தொடர்பாளர் குவோ ஜியாகுன் கூறி உள்ளதாவது; கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு வருத்தத்தை தெரிவித்து கொள்கிறோம். தங்கள் அன்புக்கு உரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கல்கள்.