இந்தியா - பாக் சண்டை நிறுத்தத்தால் எல்லையோர மக்கள் நிம்மதி! India - Pak War | Operation Sindhoor |
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய படைகள், 6ம் தேதி நள்ளிரவு தாக்குதல் நடத்தின. இதில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இதையடுத்து, பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக, பாக். ராணுவம் களம் இறங்கியது. இந்திய படைகள், மக்கள் வசிக்கும் பகுதிகள், வழிபாட்டு தலங்களில், ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. சில இடங்களில் சிறிய ரக குண்டுகள், துப்பாக்கிகளை பயன்படுத்தியும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு நம் முப்படைகள் தக்க பதிலடி கொடுத்ததால், இரு தரப்பு சண்டை தீவிரம் அடைந்தது. இந்தியா - பாகிஸ்தான் சண்டையால், ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய எல்லையோர மாநிலங்களில் பதட்டம் ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, எல்லையோரங்களில் உள்ள பள்ளிகள், கல்லுாரிகள் மூடப்பட்டன. இரவு நேரங்களில் மின் தடை அமல்படுத்தப்பட்டதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. ஜம்மு - காஷ்மீர் முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. இதற்கிடையே, பாக். ராணுவத்தின் கோரிக்கையை ஏற்று, இரு தரப்பு சண்டை 10ம் தேதி மாலை முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. எனினும், பாகிஸ்தான் ராணுவத்தின் ட்ரோன் தாக்குதல் தொடர்ந்ததால், எல்லையோர மாவட்டங்களில் பீதி நீடித்தது. கடந்த இரு தினங்களாக பாக். தாக்குதல் பெருமளவு குறைந்துள்ளது. இந்நிலையில், ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகர், ஜம்மு, ரியாசி உள்ளிட்ட பகுதிகளில் இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. பாக். தாக்குதலில் கடுமையாக பாதிக்கப்பட்ட சம்பாவில், இன்று கடைகள், வர்த்தக நிறுவனங்கள் திறக்கப்பட்டதால், இயல்பு வாழ்க்கை மெல்ல மெல்ல சீராகி வருகிறது. ராஜஸ்தானின் பார்மரிலும் மீண்டும் கடைகள் திறக்கப்பட்டதால், வீதிகளில் மக்கள் நடமாட்டம் காணப்படுகிறது. எல்லையோர மாவட்டங்களில் அமைதி திரும்பினாலும், நிலைமையை கண்காணித்து பள்ளி, கல்லுாரிகள் திறப்பு குறித்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் முடிவெடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்தியா - பாக். சண்டையால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு சில பகுதிகள் தவிர, நாட்டின் பெரும்பாலான இடங்களில் அமைதி திரும்பியுள்ளது. பதட்டம் தணிந்துள்ளதால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஜம்மு - காஷ்மீரின் சம்பாவில் ஓரிரு இடங்களில் பாக். தாக்குதலுக்கு உள்ளான வீடுகளை உள்ளூர் அதிகாரிகள் பார்வையிட்டனர். மற்றபடி, சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்ததால், பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிகளுக்கு செல்வதை காண முடிந்தது.