நீர் வளத்தை பாதுகாப்பதே 21ம் நுாற்றாண்டின் சவால் : மோடி Ken - Betwa river interlinking project | Nat
மத்திய பிரதேசத்தின் கஜுராகோவில் நடந்த அரசு நிகழ்ச்சியில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நுாற்றாண்டு சிறப்பு தபால் தலை, 100 ரூபாய் சிறப்பு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். மத்திய பிரதேசம் - உத்தர பிரதேசம் இடையே பாயும் கென் - பெத்வா நதிகள் இணைப்பு திட்டம், மிதவை சோலார் மின் உற்பத்தி திட்டம், 1153 கிராம சேவை மைய கட்டடங்கள் உட்பட பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். கென் - பெத்வா நதிகள் இணைப்பு திட்டத்தின் மூலம், இரு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் பலன் அடைவர் என, அரசு அறிவித்துள்ளது. தேசிய நதி நீர் இணைப்பு திட்டத்தின் கீழ், நாட்டிலேயே முதல் முறையாக இரு மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் இணைப்பு திட்டம் துவங்கி வைக்கப்பட்டுள்ளது. வாஜ்பாயின் கனவு திட்டமான நதிகள் இணைப்பை நனவாக்கும் வகையில், மத்திய - மாநில அரசுகள் இணைந்து கென் - பெத்வா நதிகள் இணைப்புக்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. 44,650 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்தை தேசிய அளவிலான நதி நீர் இணைப்பு திட்டத்தின் கீழ் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி, கென் நதியின் குறுக்கே பிரமாண்ட அணை கட்டப்படும். கென் - பெத்வா நதிகள் இடையே, 221 கிமீ நீளத்திற்கு கால்வாய் அமைக்கப்படும்.