குடும்பத்தில் ஒருவர் கூட மிஞ்சாத சோகம்: பகீர் சம்பவம் | Kerala | Venjaramoodu
கேரளாவின் திருவனந்தபுரம் அருகே பேருமலை பகுதியை சேர்ந்தவர் அபான், வயது 23. திங்களன்று இரவு வெஞ்ஞாரமூடு போலீஸ் ஸ்டேஷனுக்கு ரத்த கரையுடன் வந்தார். தனது அம்மா, தம்பி, காதலி உட்பட 6 பேரை கொலை செய்துவிட்டேன் என கூறினார். அபான் சொன்னதை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் தொடர்ந்து விசாரித்தனர். அப்போது பேருமலையில் 3 பேரையும், சுள்ளாளத்தில் 2 பேரையும், பாங்கோட்டில் ஒருவரையும் சுத்தியலால் அடித்துக்கொன்றேன் என்றார். நானும் விஷம் குடித்து விட்டேன். வீட்டில் உள்ள கியாஸ் சிலிண்டரை திறந்து வைத்துள்ளேன் என போலீசுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தந்தார். உடனடியாக அபானை ஆஸ்பிடலில் அட்மிட் செய்த போலீசார், அவர் கூறிய இடங்களுக்கு சென்றனர். அங்கு 5 பேர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். ஒரு பெண் மட்டும் படுகாயங்களுடன்உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்தார். அவரை மீட்ட போலீசார் அருகில் உள்ள ஆஸ்பிடலில் அட்மிட் செய்தனர். அவர் அபானின் அம்மா என தெரியவந்தது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சுத்தியால் அடித்து கொல்லப்பட்டது குறித்து போலீசார் விசாரணையை தொடங்கினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. பேருமலையை சேர்ந்த ரஹிம்-ஷெமி தம்பதியின் மூத்த மகன் அபான் தான் அபான். 13 வயதில் அப்சான் என்கின்ற இன்னொரு மகனும் இருக்கிறான். ரஹிம் அரபு நாடு ஒன்றில் கார் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். அபான் கடந்த சில வருடங்களுக்கு முன் அரபு நாட்டிற்கு சென்று தந்தைக்கு உதவி வந்துள்ளார். கோவிட் பரவலுக்கு பிறகு அபான் கேரளா திரும்பிவிட்டார். ரஹிம் மட்டும் வெளிநாட்டில் தொழில் செய்து வந்தார். அபானின் பாட்டி சல்மாபீவி பாங்கோட்டில் வசித்து வந்தார். அதேபோல் அபானின் சித்தப்பா லத்தீப், சித்தி ஷாகிதா. இவர்கள் இருவரும் சுள்ளாளத் பகுதியில் வசித்து வந்தனர். அபானின் காதலி பசானா. இவர் கல்லூரி படித்து வந்தார். சமீபத்தில் அபானின் தந்தைக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அந்த நேரம் பார்த்து அபான் தனியாக தொழில் தொடங்கவும் நினைத்துள்ளார். அபான் தனது காதலி பசானாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் புதிய வீடு ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். காதலிக்கு சேர்த்து வைத்த பணத்தை செலவழித்துவிட்டதால் சொந்தமாக தொழில் தொடங்க பணம் இல்லையாம். வீட்டிலும் பொருளாதார நெருக்கடி. இதனால் பாட்டியிடமும், சித்தப்பா, சித்தியிடமும் தொழில் தொடங்க அபான் பணம் கேட்டுள்ளார். அப்போது, காதலிக்கு வீடு வாங்கி தர பணம் இருக்கு. தொழில் தொடங்க பணம் இல்லையா என உறவினர்கள் கேலி செய்துள்ளனர். இதனால் அபான் மீது அவரது குடும்பமே வெறுப்பில் இருந்துள்ளது. காதல் விவகாரத்தால் அவரது வீட்டில் சண்டை ஏற்பட்டது. மொத்த குடும்பமும் தன்னை ஒதுக்கிவிட்டார்கள் என்கிற விரக்தியில் இருந்த அபான் விபரீத முடிவு எடுத்தார்.