கழிவுகள் ஏற்றி வந்த வாகனங்கள் பறிமுதல்; 9 பேர் கைது Kerala waste spotted at Kanyakumari| Kerala wast
கேரளாவில் ஆஸ்பிடல்கள், ஓட்டல்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், தமிழக எல்லை மாவட்டங்களுக்கு கொண்டுவந்து கொட்டுவது வாடிக்கையாக உள்ளது. சமீபத்தில், கேரளாவின் மருத்துவ கழிவுகள், திருநெல்வேலியில் கொட்டப்பட்டது. இதை தாமாக முன் வந்து விசாரித்த பசுமை தீர்ப்பாயம், கழிவுகளை அகற்ற கேரளா அரசுக்கு உத்தரவு போட்டது. இதையடுத்து, கழிவுகள் அகற்றப்பட்டன. எனினும், கேரளாவில் இருந்து கழிவுகள் கொண்டு வரப்பட்டு தமிழக பகுதியில் கொட்டப்படுவது தொடர்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் பனச்சமூடில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியக வந்த 5 மினி லோடு ஆட்டோக்களை சோதனையிட்டபோது, ஓட்டல் உணவுக்கழிவுகள், இறைச்சி கழிவுகள் இருப்பது தெரிய வந்தது. தமிழக எல்லையில் கொட்டுவதற்காக கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்டு இருந்தன. மினி லோடு ஆட்டோவில் கூண்டு போட்டு மூடிய 5 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கழிவுகளை ஏற்றி வந்த 9 பேர் கைது செய்யப்பட்டனர். கேரளா கழிவு வாகனங்கள் பிடிபட்டதால் கன்னியாகுமரி எல்லையில் வாகன சோதனையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.