4 நாட்களாகியும் கடத்தப்பட்ட நபர் மீட்க முடியாத நிலை | kidnapping case | Crime | Madurai Police
மதுரையில் வீடு புகுந்து தொழிலதிபர் கடத்தல்! 9 பேர் கைது மீட்பு நடவடிக்கை தீவிரம்! மதுரை பீபிகுளத்தைச் சேர்ந்தவர் சுந்தரராமன் வயது 56. மதுரையில் பிரபல தொழிலதிபரும் மில் ஓனரின் மகனும் ஆவார். ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் விற்கும் தொழில் செய்கிறார். திருமணம் ஆகாதவர். இவருக்கு குற்றாலம், திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களிலும் சொத்துக்கள் உள்ளன. மதுரையை சேர்ந்த சிலர் திண்டுக்கல்லில் உள்ள சுந்தரராமனின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 6 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்தனர். அது தன்னுடைய நிலம் எனக்கூறி ஆவணங்களுடன் ஐகோர்ட் மதுரை கிளையில், சுந்தரராமன் வழக்கு தொடர்ந்தார். சென்ற மாதம் விசாரணைக்கு வந்தபோது, கோர்ட் வளாகத்திலேயே சுந்தரராமனுக்கு எதிர்தரப்பினர் மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் இடப்பிரச்னை தொடர்பாக ஏப்ரல் 14 அன்று சுந்தரராமன் வீட்டிற்கு வந்து சிலர் பேச்சு நடத்தி உள்ளனர். ஆனால் சுந்தரராமன் ஒப்புக்கொள்ளாததால் அவர்கள் வந்த காரில், அவரை கடத்தி சென்றனர். அருகிலிருந்த கடை ஊழியர், போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தொடர் விசாரணைக்கு பின் கடத்தலுக்கு உதவியதாக நேற்று முன்தினம் ஐந்து பேரை தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர். நேற்று நான்கு பேரை கைது செய்தனர். பெயர், விபரங்களை போலீசார் வெளியிடவில்லை. சுந்தரராமனை மீட்க அமைக்கப்பட்ட தனிப்படை போலீசாரில் சிலர், வடமாநிலங்களுக்கு சென்றுள்ளனர். போலீசார் கூறுகையில் விரைவில் சுந்தரராமன் மீட்கப்படுவார். அப்போது தான் அவர் கடத்தப்பட்டதற்கான உண்மை காரணம், இதில் சம்பந்தப்பட்டிருக்கும் குற்றவாளிகள் குறித்தும் தெரியவரும் என்றனர்.