வழக்கு முன்னோக்கி நகரும் என போலீஸ் அதிகாரி தகவல்! kodanad case | CBCID Investigation | Mobile Trace
கோடநாட்டில் கொலை, கொள்ளை நடந்த நாளன்று நடந்த தொலைபேசி உரையாடல்கள், போன் எண்களை, பெரும் போராட்டத்துக்கிடையே சி.பி.சி.ஐ.டி போலீசார் கைப்பற்றியுள்ளனர். நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. அங்கு 2017ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுவரை 300க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கொடுக்கும் தகவலின்படி, பலருக்கு சம்மன் அனுப்பி சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவம் நடந்த பகுதியில், செயல்பாட்டில் இருந்த 60 மொபைல் எண்கள், 19 டவர் விவரங்களை, போலீசார் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் சேகரிக்க முயற்சி செய்தனர். அந்த பதிவுகள் அழிந்து விட்டதாகவும், அந்த தகவல்களை திருச்சியில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் தான் சேகரிக்க முடியும் என, அதிகாரிகள் தெரிவித்து விட்டனர். இதையடுத்து, மொபைல் தகவல்களை மீட்டுத்தர, குஜராத்தில் உள்ள தேசிய தடயவியல் ஆய்வக பல்கலைக்கழத்துக்கு கடந்தாண்டு பிப்ரவரியில் சி.பி.சி.ஐ.டி போலீசார் கடிதம் அனுப்பினர். இதை தொடர்ந்து, திருச்சியில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில், நேரில் சென்று கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் நடந்த தினத்தன்று, பதிவாகி இருந்த மொபைல் எண் மற்றும் டவர்களின் தகவல்களை, 10 டேப்புகளில் சேகரித்தனர். முன்னதாக, மொபைல் எண் தகவல்கள், மேக்னடிக் டேப்களில் சேகரித்து வைக்கப்பட்டன. தற்போது, இணைய வழியில் கிளவுடில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதனால் டேப்பில் உள்ள தகவல்களை மீட்டுத்தர, தேசிய தடயவியல் ஆய்வக பல்கலைக்கழத்தினர், ஒராக்கிள் மென்பொருள் நிறுவனத்தை நாடினர். இந்நிலையில், மொபைல் தகவல்களை மீட்டெடுத்து, சர்வரை பழையபடி செயல்பட வைக்க 2.94 கோடி ரூபாய் செலவாகும் என ஒராக்கிள் நிறுவனத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து, அந்தப் பணத்தை தேசிய தடயவியல் ஆய்வக பல்கலைக்கழகத்தினர் தர வேண்டுமென, பி.எஸ்.என்.எல். அதிகாரிகள், சேலம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். பத்து மேக்னடிக் டேப்பில் சுமார் 30 நபர்களின் மொபைல் உரையாடல்கள், மொபைல் எண்கள் பதிவாகியுள்ளன. அவற்றை மீட்டெடுத்து கிடைக்கும் தகவல் அடிப்படையில், இந்த வழக்கு முன்னோக்கி நகரும் என போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.